valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 7 May 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


இங்கு, யாகம் செய்பவர் எஜமானர்.  அவர் அஞ்ஞானத்தைத் தீயில் நெய்யாகப் பொழிகிறார்.  ஆத்மானந்தத்தில் அவர் மூழ்குவதே அவபிரத ஸ்நானம் (வேள்வியை வெற்றிகரமாக முடித்த பின் செய்யும் நீராடுகை)

தாத்பர்யம் என்னவென்றால், அஞ்ஞானம் என்னும் நெய் இல்லாது, ஞானமெனும் அக்கினியைத் தூண்ட முடியாது.  இத் தீயால் ஜீவேசுவர பேதத்தை அழித்தால்தான், அபேத ஞானம் (ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே எனும் ஞானம்) வெளிப்படும்.

முகம் பார்க்கும் கண்ணாடி மாசுபடுவதால் மங்குவது போலவும், புகை மூடுவதால் அக்கினியின் பிரகாசம் குறைவது போலவும், காமம் குரோதம் ஆகிய தீவிர உணர்வுகளால் தோற்கடிக்கப்படும் ஞானம், அஞ்ஞானத்தால் மூடப்படுகிறது. 

ராகு சந்திரனைப் பிடிப்பது போலவும் (கிரஹணம்), நீரைப் பாசி மூடுவது போலவும், கயஞ்சோதியான ஞானத்தை மாயை மூடிவிடுகிறது. 

மஹா பெரிய ஞானிகளும் மனம் தடுமாறி அதோகதி (தாழ்நிலை) அடைகிறார்கள்.  விடுபடும் உபாயம் தெரிந்திருந்தும், இஷ்டம்போல் நடந்தது கொள்கின்றனர். 

அவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள். சத்சங்கத்தை விடுத்து, விலக்க வேண்டியவர்களின் கூட்டுறவை நாடுகிறார்கள்.  துர்ச்சங்கம் அவர்களைப் பலமாகப் பிடித்துக்கொள்கிறது.  துர்ச்சங்கத்தின் (கெட்ட சேர்க்கையின்)  பலவந்தத்தால் இஷ்டப்படி நடந்து கொள்கின்றனர். 

வானப்ரஸ்தத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இல்லறத்தில் நுழைந்து, எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்கின்றனர்.  எதை வெறுத்து ஒதுங்கினார்களோ அதையே (இல்லறத்தையே) திரும்பவும் ஆவலுடன் ஏற்றுக்கொள்கின்றனர். 

பாவம் செய்யக்கூடாது என்று முயற்சி செய்பவர்கள் விதிவசத்தால் பாவம் செய்யத் தூண்டப்படுகிறார்கள்.  இந்த நிலையைப் பற்றி என் சொல்வது?  இவர்களையும் ஞானியரில் ஒருவகை என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமோ!

பாவத்தின் நிழலையும் தொடாது வாழவேண்டும் என்று விரும்பும் மஹா ஞானியுங்கூட, விளக்கால் கவரப்படும் வீட்டில் பூச்சியைப் போன்று, செய்யத் தகுந்த காரியம் எது, செய்யத் தகாத காரியம் எது, என்று சீர்தூக்கிப் பார்க்க மறந்துவிடுகிறார். 

பாவம் செய்வது அஞ்ஞானம்.  இதை அவர் நன்கு அறிவார்.  ஆயினும், ஆசைகளின் உந்துதலால் அவர் அதைபற்றிக் கவலைப்படுவதில்லை. 

இவ்வகையான செயல்கள் அனைத்தும் ஆசையின் சேட்டைகள். ஆசையே எல்லா அனர்த்தங்களுக்கும் காரணம்.  நிறைவேறாத ஆசை கோவரூபமும் ஏற்கும். 

ஆசையின் ஓட்டம் தடுக்கப்படும்போது ஆசையே கோவமாக மாறும்.  மோட்ச மார்க்கத்தின் ஒவ்வொரு படியிலும் தடுக்கிவிடுவது இதுவே.  இந்த இயல்பே ஞானத்துக்குத் தடை.