valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 16 July 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


காகா சாஹேப்பின் பல்கலைக்கழகப் படிப்பு முடிந்து பல ஆண்டுகள் உருண்டோடிய பிறகு, நானா சாஹேப் சாந்தோர்கர் அவரை லோனாவாலாவில் ஒருமுறை சந்தித்தார். 

தீக்ஷிதரும் சாந்தோர்கரும் இளமைக்கால நண்பர்கள். இருவரும் பல வருடங்கள் கழித்து சந்தித்தால், தங்களுடைய சுகதுக்கங்களைப்பற்றி பரஸ்பரம் உரையாடினர். 

லண்டன் மாநகரத்தில் வசித்த காலத்தில் ஒரு பேருந்தில் ஏற முயன்றபோது, பாதம் வழுக்கியதால், தீக்ஷிதருடைய காலில் ஊனம் ஏற்பட்டது.  எத்தனையோ வைத்தியங்கள் செய்த பிறகும் அந்த ஊனம் குணமடையவில்லை. 

உரையாடலில் அந்த ஊனம் பற்றிய பேச்சு இயல்பாக எழுந்தது. அந்த சமயத்தில் நானாவுக்கு ஸ்ரீ சாயி பாபாவின் அற்புத சக்திகள் குறித்து நினைவுக்கு வந்தது. 

"கால் ஊனம் முழுமையாகக் குணமாகவேண்டுமென்று நீர் விரும்புகிறீரா அப்படியானால் என் குருவை தரிசனம் செய்ய வாரும்" என்று தீக்ஷிதரிடம் நானா உடனே சொன்னார். 

பின்னர் நானா, ஞானிகளின் சிரோன்மணியாகிய சாயியின் விருத்தாந்தத்தையும் விசேஷங்களையும் மஹிமையையும் தீக்ஷிதருக்கு ஆனந்தத்துடன் எடுத்துச் சொன்னார். 

"என் மனிதன் எவ்வளவு தூரத்திலிருந்தாலும், எழுகடல் தாண்டி இருந்தாலும் சரி, காலில் நூல் கட்டப்பட்ட சிட்டுக்குருவியை இழுப்பதுபோல் அவனை உடனே என்னிடம் ஈர்த்துக்கொள்வேன்".

இவ்வாறே, பாபா எப்பொழுதும் பேசினார். இதைத் தெளிவுபடுத்தும் வகையில் நானா மேலும் சொன்னார், "நீர் பாபாவைச் சார்ந்தவராக இல்லாவிட்டால்.  உமக்கு அவரிடம் ஈர்ப்பு ஏற்படாது.-

"நீர் அவருக்குச் சொந்தமாக இல்லாவிடின், உமக்கு அவருடைய தரிசனம் கிடைக்காது. இதுவே பாபாவின் முக்கிய லக்ஷணம் (அடையாளம்).  உம்முடைய தீர்மானத்தால் மாத்திரம் நீர் அங்கே போகமுடியுமா என்ன?"

இவ்வாறாக,  சாயியைப்பற்றிய வர்ணனையைக் கேட்ட தீக்ஷிதர், மனத்துள் பெரும் திருப்தியடைந்தார்.  அவர் நானாவிடம் சொன்னார், "நான் பாபாவை தரிசனம் செய்ய வருகிறேன்.-

"என்னுடைய கால் என்ன பெரிய விஷயம்? முழுவுடலுமே நசித்துப் போகக்கூடியது அன்றோ? என்னுடைய கால் ஊனம் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நான் அதைபற்றிக் கவலைப்படவில்லை.-

"நான் உம் குருவை தரிசனம் செய்ய விரும்புவது, நிரதிசய இன்பம் (அதைவிட மேம்பட்ட இன்பமில்லாத வீட்டின்பம்) பெறுவதற்காகவே. அல்ப சுகங்களின்மேல் எனக்கு ஆசை இல்லை. அவற்றை யான் யாசிக்கமாட்டேன்.