valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 2 April 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


நமஸ்கரித்தும் கேட்டும், பணிவிடை செய்தும் அந்த ஞானத்தை அறிந்துகொள்.  தத்துவத்தை அறிந்த ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள். கீதை 4  - 34  (பொழிப்புரை)

இதுதான் கீதையின் மூல சுலோகம்.  இந்த சுலோகத்தின் இரண்டாவது அடியில் ஞானம் எனும் சொல்லுக்கு முன்னால், அகாரம் தொக்கிநிற்கும் குறியைச் சேர்த்தால், அச் சொல் அஞ்ஞானம் என்று மாறுபடும். 

அகாரம் தொக்கிநிற்கும் குறியைப்பற்றி நினைக்காமல் விட்டுவிட்டால், ஞானம் என்பதுதான் பதம். இதில் சந்தேகமேயில்லை.  அதற்கு விரோதமாக, துராகிருதம் (உரிமை இல்லாத இடத்தில் வலிய நிகழ்த்தும் செயல்) செய்ய விரும்புபவர் யாரும் இல்லை.  ஏனெனில், அந்தப் பதமும் அர்த்தமும் எல்லாராலும் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும். 

"ஞானத்தால்தான் கைவல்லியம் (வீடுபேறு) அடையப்படுகிறது." இந்த வேதவசனம் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து. ஆயினும், 'தத்துவம் அறிந்தவர்களின் உபதேசத்தின் மூலமாகத்தான் ஞானம் பெறப்படவேண்டும்' என்று இந்த வேதவசனத்தை நீட்டித்துக் கருத்தைக் கட்டுப்படுத்துவது அனாவசியம். 

நான் ஆத்மா; நிர்மலன்; சுத்தன்; புத்தன்; சுதந்திரமானவன்; ஆதியந்தமில்லாத சாட்சி மாத்திரமே. எல்லா உயிர்களிலும் ஒளிரும் தூய உணர்வு நான்.  'இருப்பது ஒன்றே; இரண்டாவதாக ஏதும் இல்லை' எனும் உணர்வு விளைவிக்கும் ஆனந்தத்தால் நான் நிறைந்திருக்கிறேன். 

மேலும், நான் அஞ்ஞானம் அல்லேன்; அஞ்ஞானம் என்னுடைய செயல் அன்று.  அதர்வண வேதத்தின் மஹாவாக்கியமான 'அயம் ஆத்மா ப்ரஹ்ம' (இந்த ஆத்மா முழுமுதற்பொருள்) என்னும் சொற்றொடரில் இடம்பெறும் ஆத்மா நானே.  இருக்கு வேதத்தின் 'ப்ரக்ஞானம் ப்ரஹ்ம ' (ஆத்மாவின் சஞ்சலமற்ற ஒருங்கிணைந்த தூய அறிவுநிலை முழுமுதற்பொருள் ) என்னும் மஹாவாக்கியத்தின் பொக்கிஷமும் நானே. 

யஜுர் வேதத்தின் 'அஹம் ப்ரம்மாஸ்மி ' (நான் முழுமுதற்பொருளாக இருக்கிறேன் ) என்னும் மஹாவாக்கியத்தை இடைவிடாது மனத்தில் இருத்துதலே வித்யா (மெய்ஞ்ஞானம்)  என்று அறிக.  நான் பாவி,  பாக்கியமற்றவன், தெய்வ அருள் இல்லாதவன் என்பது போன்ற எண்ணங்களுக்கு இடமளிப்பதே அவித்யா (அஞ்ஞானம்).

இரண்டுமே ஆதியந்தமில்லாத மாயையின் புராதனமான சக்திகள். ஒன்று (அவித்யா) பந்தத்தை விளைவிக்கும்.  மற்றொன்று (வித்யா) பந்தங்களிலிருந்து விடுவித்து முக்தியை அளிக்கும். 

பெயர், உருவம் ஆகிய சகலமான பிரமைகளும் மாயை விளைவிக்கும் குழப்பங்களே.  மாயையின் சக்தியை விளக்கமுடியாது; கடப்பது அதனினும் கடினம். 

கற்பனையில் என்னென்ன உதிக்கின்றனவோ அவை அனைத்தும் மாயையின் வசிப்பிடங்கள்.  கட்டுக்குப்பட்ட நிலை, முக்தியடைந்த நிலை, ஆகிய கருத்துக்கள் நிச்சயமாகக் கற்பனையிலிருந்து பிறந்தவையே!