valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 6 October 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஒரு குழந்தைக்கு எப்படிச் சாப்பிடுவது என்றுதான் தெரியும்; எதைச் சாப்பிடுவது என்பது தெரியாது. தாய்தான் பாலூட்டியோ ஒரு கவளம் சோறூட்டியோ குழந்தையைப் பாதுகாக்க வேண்டும்.

அவ்வாறே, என் சாயிமாதாவும் என்னுடைய பேனாவைப் பிடித்துக்கொண்டு தம் பக்தர்களின்மேல் கொண்ட அன்பால் இந்தப் பிரபந்தத்தை (பாமாலையை) எனக்கு சிரமமேதுமின்றி எழுதி வாங்கிக்கொண்டார்.

மோக்ஷம் சித்தியாவதற்கான சாதனைகளை தர்மசாஸ்திரம் நான்கு யுகங்களுக்கும் நான்குவிதமாக விதித்திருக்கிறது. கிருதயுகம் அல்லது சத்யயுகத்திற்குத் தவம்; திரேதாயுகத்திற்கு ஞானம்; துவாபரயுகத்திற்கு யாகம்; கலியுகத்திற்கு தானம்.

மனிதன் அடிக்கடி தானதர்மங்கள் செய்யவேண்டும். பசிப்பிணியைக் களைவதையே முக்கியமான தானமாகக் கருதவேண்டும். நித்தியநியமமாக அன்னதானம் செய்வதையே தலையாய கடமையாகக்கொண்டு வாழ வேண்டும்.

மதியம் பன்னிரண்டு மணிக்கு அன்னமேதும் கிடைக்காவிட்டால் மனம் குழம்புகிறது. நமக்கெப்படியோ அப்படியே பிறருக்கும். இதை உள்ளுக்குள் நன்கு உணர்ந்தவன் உயர்ந்த மனிதன்.

ஆசாரதர்மத்தில் பிரதானமானதும் முதலில் செய்யவேண்டியதுமான தானம் அன்னதானம். இதுபற்றி நன்கு சிந்தித்துப் பார்த்தால் அதைவிட சிரேஷ்டமான (சிறந்த) தானம் எதுவும் இல்லை என்பது நன்கு விளங்கும்.

அன்னம் பாரா பிரம்ம ரூபம். எல்லா உயிரினங்களும் அன்னத்திலிருந்தே எழுகின்றன. அன்னமே உயிரைக் காப்பாற்றும் சாதனம். உயிர் உடலைப் பிரிந்த பிறகு அன்னத்திற்குள்ளேயே சென்று கலந்து விடுகிறது.

அதிதி (விருந்தாளி) நேரத்தோடு வந்தாலும், நேரம் தவறி வந்தாலும், இல்லறத்தோன் அவருக்கு அன்னமிட்டுத் திருப்திசெய்யவேண்டும். அன்னமளிக்காமல் விருந்தாளியை அனுப்பிவிடுபவன் இன்னல்களுக்கு அழைப்புவிடுகிறான்; இதில் சந்தேகமே இல்லை.

வஸ்திரங்களையோ பாத்திரங்களையோ தானமாக அளிக்கும்போது தானம் வாங்குபவர் தகுதியுள்ளவரா என்று யோசிக்கவேண்டிய அவசியம் உண்டு. அனால், அன்னதானம் செய்வதற்கு இந்தச் சிந்தனையே தேவையில்லை. வீட்டுவாயிலுக்கு எவர் வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும், அவரை அனாதவராக விட்டுவிடுவது தகாது.

அன்னதானம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது; இதற்கு கருதியே (தைத்திரீய உபநிஷதம்) பிரமாணம். ஆகவே, பாபாவும் உலகியல் ரீதியைக் கடைபிடிக்கும் வகையில் ஜனங்களுக்கு உணவளித்துத் திருப்தி செய்தார்.

அன்னதானம் இன்றிச் செய்யப்படும் காசுதானம் போன்ற மற்ற தானங்கள் முழுமை பெறாதவை. எத்தனை நட்சத்திரங்கள் இருப்பினும் சந்திரன் இன்றி வானம் அழகு பெறுமோ? பதக்கம் இல்லாமல் தங்கச்சங்கிலி முழுமை பெறுமோ?

அறுசுவை உணவில் பருப்பு எவ்வாறு முக்கியமானதோ அவ்வாறே புண்ணியங்களிலெல்லாம் சிறந்த புண்ணியம் அன்னதானம். கலசமில்லாத கோபுரத்திற்கு தாமரை இல்லாத நீர்நிலைக்கும் சோபை ஏது?