ஷீர்டி சாயி சத்சரிதம்
அங்கிருந்து அவர்கள் திருமணவிழாவிற்காக குவாலியர்க்குச் சென்றனர். அப்பொழுது சாந்தோர்க்கர் மாதவராவுக்கு நூறு ரூபாய் அளித்தார்.
மணப்பெண்ணின் தகப்பனார் ஸ்ரீமான் ஜடாரும் அவருக்கு நூறு ரூபாய் அளித்தார். இவ்வாறு, சாந்தோர்க்கருடைய குருபந்துவாகிய (ஒரே குருவினைப் போற்றி வழிபடுவதால் உறவினர் போன்று நெருக்கமாக ஆகிவிட்டவராகிய) மாதவராவுக்கு அன்பளிப்பாக நிறைய வருமானம் கிடைத்தது.
காசியில் 'மங்கள்காட்டில்' (ஒரு படித்துறையின் பெயர்) வெள்ளியும் பொன்னும் மணிகளும் இழைக்கப்பட்ட, அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய லக்ஷ்மிநாராயணர் கோயில் ஒன்று உண்டு. இக் கோயில் ஜடாருக்குச் சொந்தமானது.
ஜடாருக்குச் சொந்தமான ராமர் கோயில் ஒன்று அயோத்தியாவிலும் இருந்தது. இவ்விரண்டு புண்ணிய க்ஷேத்திரங்களிலும், மாதவராவையும் ஆபா கோதேவையும் மரியாதையுடன் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஜடார் தம் மணியக்காரரிடம் ஒப்படைத்தார்.
குவாலியரிலிருந்து அவர்கள் மதுராவிற்குச் (வடமதுரை - ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி) சென்றனர். அவர்களுடன் கூட ஓஜயேயும் பினீவாலேயும் பேன்டார்கரும் சென்றனர். ஆனால், அவர்கள் மூவரும் மதுராவிலிருந்து வீடு திரும்பிவிட்டனர்.
மாதவ்ராவென்னவோ, ஆபா கோதேவுடன் பிரயாகைக்குச் (அலஹாபாத் - திரிவேணி சங்கமம் ஆகும் இடம்) சென்றுவிட்டு அங்கிருந்து ஸ்ரீ ராமநவமி விழா ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தக்க சமயத்தில் அயோத்தியை வந்தடைந்தார்.
அவர்களிருவரும் அயோத்தியில் இருபத்தொன்று நாள்களும் காசியில் இரண்டு மாதங்களும் கழித்தனர். சூரியகிரஹணமும் சந்திரகிரஹணமும் சம்பவித்து முடிந்த பிறகு, இருவரும் கயாவிற்கு கிளம்பினர்.
கயா அப்பொழுது பிளேக் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டிருந்தது. தெருக்களிலும் வீதிகளிலும் மக்கள் பீதியுடன் கவலை தோய்ந்து காணப்பட்டனர். எப்படியோ இச்செய்தி புகைவண்டியில் இருந்தபோதே மாதவராவுக்கு எட்டிவிட்டது.
புகைவண்டி கயா ரயில் நிலையத்திற்குள் இரவு நேரத்தில் வந்து சேர்ந்தது. ஆகவே, இருவரும் அருகிலிருந்த தர்மசத்திரத்தில் அன்றிரவைக் கழித்தனர்.
காலையில் கயாவளி (யாத்திரீகர்களுக்குச் சடங்குகளும் பூஜைகளும் செய்வித்து சம்பாதிப்பவர்) ஒருவர் அவர்களை சந்திப்பதற்காக வந்தார். வரும்போதே, "சீக்கிரம் கிளம்புங்கள், யாத்திரீகர்களின் கூட்டம் முழுவதும் வெளியே போவதற்குத் தயாராகிவிட்டது" என்று துரிதப்படுத்திக்கொண்டே வந்தார்.
மனச்சஞ்சலம் பீதியும் கொண்டிருந்த மாதவராவ் மெல்லிய குரலில் அவரை வினவினார், "வருகிறோம், வருகிறோம், ஆனால், உங்கள் பேட்டையில் கொள்ளைநோய் இருக்கிறது போலிருக்கிறதே ?"