valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 4 January 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


நோய் தீர்க்கும் எந்த உபாயத்தையும் பாக்கி வைக்கவில்லை. நோயின் உக்கிரத்தைக் குறைக்க முடியாதுபோகவே, அவருக்கு வாழ்க்கையின் மீதே வெறுப்பு ஏற்பட்டது.

அந்த மனநிலையில் அவர் இருந்தபோது, திடீரென்று ஒருநாள் பாபா அவருடைய படுக்கையின் அருகில் நள்ளிரவு நேரத்தில் தோன்றினார்.

பாடீல் உடனே பாபாவின் பாதங்களைப் பற்றிக்கொண்டு பெரிதும் மனமுடைந்தவராய் அவரிடம் சொன்னார், 'பாபா, எனக்கு எப்பொழுது நிச்சயமாகச் சாவு வரும்? இதை மட்டும் எனக்குச் சொல்லுங்கள்!-

"எனக்கு இனி உயிர்வாழ இஷ்டமில்லை; மரணம் எனக்குப் பெரிய சங்கடமொன்றுமில்லை. மரணத்தைச் சந்திக்க நான் காத்துக்கொண்டிருக்கிறேன்!"

கருணாமூர்த்தியான சாயி அப்பொழுது அவரிடம் சொன்னார், "சிறிதளவும் கவலைப்படாதீர். உயிரைப் பறிக்கக்கூடிய நிலைமையும் பீதியும் கடந்துவிட்டன. ஏன் ஓய், அனாவசியமாகக் கவலைப்படுகிறீர்?-

"நீர் சிறிதும் பயப்படவேண்டா. உம்முடைய ஹூண்டி (மரண ஓலை) திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. ஆனால், ராமச்சந்திரா, தாத்யாவின் (தாத்யா கண்பத் பாடீல் கோதேவின்) கதியைப் பற்றி எனக்கு விடிவு ஏதும் தெரியவில்லை!-

"1918 ஆம் ஆண்டு, தக்ஷிணாயனத்தில், ஐப்பசி மாதத்தில், வளர்பிறை தசமி திதியில் (விஜயதசமியன்று) தாத்யா மேலுலகம் செல்வான்.-

"ஆயினும், இதை அவனிடம் சொல்லாதீர். அவன் மனத்தில் மரணபயம் ஏறி உட்கார்ந்துகொள்ளும். இரவுபகலாக சோகத்தால் நைந்து போவான். யாருமே சாவதற்கு விரும்புவதில்லை."

இரண்டு வருடங்கள்தாம் இருந்தன. தாத்யாவின் வேளை நெருங்கிவிட்டது. பாபாவின் வார்த்தை வஜ்ஜிரம் போன்ற உறுதியானதாயிற்றே! பாடீல் கவலையில் ஆழ்ந்தார்.

விஷயத்தை தாத்யாவிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார். ஆயினும், வேறு யாருக்கும் சொல்லவேண்டா என்ற வேண்டுதலுடன் பாலா சிம்பியின் (தையற்காரர் - பாபா பக்தர்) காதில் போட்டார். இருவருமே மனம் கலங்கியவாறு இருந்தனர்.

ராமச்சந்திர பாடீல் எழுந்து உட்கார்ந்தார். அப்போதிலிருந்து அவரைப் பீடித்த வியாதி விட்டொழிந்தது. இதன் பிறகு அவருக்கே தெரியாதவாறு நாள்கள் வேகமாக ஓடின.

பாபாவின் திருவாய்மொழி எவ்வளவு துல்லியமானது என்று பாருங்கள்! 1918 ஆம் ஆண்டின் புரட்டாசி மாதம் கழிந்தது; ஐப்பசி மாதம் பிறந்தது; தாத்யா நோய்வாய்ப்பட்டு படுக்கையாக படுத்தார்.

அங்கே தாத்யா உக்கிரமான ஜுரத்தால் வாடினார்; இங்கே பாபா குளிரால் நடுங்கினார். தாத்யா தம் முழுப் பாரத்தையும் பாபாவின் மேல் போட்டிருந்தார்; பாபாவை ரட்சித்தவர் ஸ்ரீ ஹரியே!

தாத்யாவால் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாததால், பாபாவை தரிசம் செய்ய வர முடியவில்லை. தேகத்தின் யாதனையை (யமவேதனையை) அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.