ஷீர்டி சாயி சத்சரிதம்
உன் குருவின் நாமத்தை இடைவிடாது ஜபித்துக்கொண்டே இரு. அதிலிருந்து பரமானந்தம் பிறக்கும். உயிரினங்கள் அனைத்திலும் இறைவனை தரிசனம் செய்வாய். நாமத்தின் மஹிமை இதைவிட வேறென்னவாக இருக்கமுடியும்?
எவருடைய நாமம் இந்த மஹிமையை உடையதோ, அவரை நான் சத் பாவத்துடன் வணங்குகிறேன். உடலாலும் வாக்காலும் மனத்தாலும் ஒன்றி, அனன்னியகதியாக (வேறெந்த வழியையும் நாடாது) அவரிடம் நான் சரணடைகிறேன்.
இந்த சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கதையொன்றை கேட்பவர்களுக்குச் சொல்லுகிறேன். உங்களுடைய நன்மையை கருத்தில் கொண்டு, ஒரு முனைப்பட்ட சித்தத்துடன் கேளுங்கள்.
கைலாசவாசி ஆகிவிட்ட காகா தீக்ஷிதர் சமர்த்த சாயியின் ஆக்கினைப்படி நித்திய நியாயமாக பாகவதம் வாசித்துவந்தது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்.
ஒருநாள், சைலாபாடியில் இருந்த காகா மஹாஜனியின் இல்லத்தில் போஜனம் செய்த பிறகு, தீக்ஷிதர் நித்திய நியமத்தின்படி போதியை (யேசுநாத பாகவதம்) வாசித்தார்.
கூடியிருந்தவர்கள் ஒப்பில்லாத யேசுநாத பாகவதத்தின் சுவை மிகுந்த இரண்டாவது அத்தியாயத்தைச் செவிமடுத்தனர். கேட்டவர்களின் அந்தரங்கம் சாந்தியாலும் களிப்பாலும் நிரம்பியது.
காகா மஹாஜனி, மாதவ்ராவ் (சாமா) என்ற மற்றொரு பாபா பக்தருடன் அமர்ந்து யேசுநாத பாகவதத்தை ஒருமுனைப்பட்ட மனத்துடன் கேட்டார்.
பாக்கியவசமாக, கதையும், கேட்பவர்களின் ஆசையைத் திருப்திசெய்யும் விதமாகவும், பகவானை வளப்படுவதில் ஆர்வம் விளைவிக்கும்படியாகவும் சுவாரசியமாக அமைந்தது.
விரித்துரைக்கப்பட்ட கதை ரிஷப குலத்தின் ஒன்பது ஒளிவிளக்குகளான கவி, ஹரி, அந்தரிக்ஷர் ஆகியவர்களை பற்றியது. ஆனந்தத்தை விளைவித்து ஆன்மீக போதனையையும் அளிக்கக்கூடிய கதை.
அவர்கள் ஒன்பது பேர்களும் இறைவடிவானவர்கள். எல்லையற்ற பக்தியும் மன்னிக்கும் குணமும் நிரம்பியர்வகள். ஒருசமயம் அவர்கள் பாகவத தர்மத்தின் பிரதாபத்தை வர்ணித்தனர். அதைக் கேட்ட ஜனக மகாராஜா ஆச்சரியத்தால் பேச்சிழந்துபோனார்.
எது அத்தியந்த க்ஷேமம்? ஹரிபக்தியில் உயர்ந்தது எது? ஹரியின் மாயையை சுலபமாக கடப்பது எப்படி? குருவின் திருவடியே சிரேயசு (மேன்மை) அளிப்பவற்றில் மிக உத்தமமானது.