valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 16 March 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"சாராம்சம் என்னவென்றால், அஞ்ஞானத்தை வேருடன் பிடுங்கி எறிந்துவிட்டால், எஞ்சியிருப்பது தன்னிறைவு பெட்ரா ஞானமே! ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இந்த சுலோகத்தின்மூலம் குறிப்பால் உணர்த்திய அறிவுரை இதுவே."

(பாபா அளித்த விசேஷ விளக்கம் இங்கு முடிகிறது)

இயல்பாகவே நானா அடக்கம் மிகுந்தவர். இந்தச் சிறப்புமிக்க வியாக்கியானத்தை கேட்டவுடன் பாபாவின் பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு இருகைகளையும் கூப்பிக்கொண்டார்.

பிறகு, சிரத்தையுடனும் நிட்டையுடனும் பிரார்த்தனை செய்தார், "பாபா, என்னுடைய அஞ்ஞானத்தை விலக்குங்கள். யதார்த்தமான கல்வியை அளித்து என்னுடைய கெட்ட அகம்பாவத்தை ஒழித்துகொட்டுங்கள்.-

"வெளித்தோற்றத்திற்கு சாத்விகளைப்போல் நடிப்பதில் பிரியம் கொண்டு உள்ளுக்குள் அகண்டமான விகற்பங்களை வைத்துக்கொண்டு ஒரு கணமும் அவமானத்தைப் பொறுத்துகொள்ளச் சக்தியில்லாத வாழ்க்கை - இது அஞ்ஞானமில்லாமல் வேறென்ன?-

"உள்ளுக்குள்ளே கௌரவத்தையும் புகழையும் நாடுதல், காமமும் குரோதமும் உள்ளே பொங்கிக்கொண்டிருக்கும்போது வெளிப்பார்வைக்கு தியானத்தில் மூழ்கியவன்போல் நடித்தல் - இது அஞ்ஞானமில்லாமல் வேறென்ன?-

"உள்ளே ஆத்ம நஷ்டத்தைத் தரும் செயல்கள் நிரம்பியிருப்பதால், நற்செயல்களுக்கும் ஆத்ம விசாரத்திற்கும் மனத்தில் இடமில்லாத ஒழுக்கமற்ற வாழ்க்கை, வெளியுலகத்திற்கு பிரம்ம நிட்டையுள்ளவன்போல் நடிப்பு - இது சந்தேகத்துக்கு இடமில்லாத அஞ்ஞானம் அன்றோ?-

"பாபா, கிருபையால் கனக்கும் மேகமாகிய தேவரீர் தங்களுடைய அருள்மழையை பொழிந்து என்னுடைய அஞ்ஞானத் தீயை அணைத்துவிடுங்கள்.  நான் அவ்விதம், அவ்விதந்தான் தன்னியனாவேன்! -

"எனக்கு ஞானத்தைப் பற்றிய உபந்நியாசம் தேவையில்லை. என்னுடைய இமாலய அஞ்ஞானத்தை அழித்து என்னைக் கிருபையுடன் நோக்குங்கள். அந்த கடைக்கண் பார்வையில்தான் என்னுடைய சுகமும் பூரணமான திருப்தியும் இருக்கின்றன."

சாயி, பிரேமையும் கருணையும் நிரம்பியவர். நானாவை நிமித்தமாக வைத்து உங்களுக்கும் எனக்கும் எல்லாருக்கும் கீதையின் விசேஷ அர்த்தத்தை அளித்தார்.

கீதை பகவானின் திருவாய்மொழி; ஆகவே, அது முக்காலத்திற்கும் பிராம்மணமான சாத்திரம். அதை ஒருபோதும் லேசாக எடுத்துக்கொள்ளலாகாது.

உலகியல் வாழ்வில் மூழ்கிப்போனவர்களுக்கும் ஜீவன்முத்தர்களுக்கும் இருவகையினருக்குமே சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பது தேவையில்லை. சாஸ்திரங்கள் முழுக்ஷுக்களுக்காகவே (முக்தியை நாடுபவர்களுக்காகவே) உண்டாக்கப்பட்டிருக்கின்றன.