valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 10 May 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

பக்தர்களுக்கு க்ஷேமலாபம் அருளிய மாண்பு

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயி நாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

கிருபா சமுத்திரமாகிய சாயி மஹராஜ் கண்ணால் காணக்கூடிய, இறைவனின் அவதாரமேயாவார். பூரணமான ப்ரம்மும் மஹா யோகீசுவரருமான அவருக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.

ஜயஜய ஞானிகளின் மணிமகுடமே! மங்களங்களுக்கு எல்லாம் அஸ்திவாரமானவரே! ஆத்மாராமரே! சமர்த்தசாயியே! பக்தர்கள் இளைப்பாறும் சோலையே! பூர்ணகாமரே! (எல்லா விருப்பங்களும் நிறைவேறப் பெற்றவர்) உமக்கு நமஸ்காரம்.

பக்தர்களுக்கு போதனை அளிப்பதற்காக கேலியும் நகைச்சுவையும் ஆர்வத்துடன் செய்யப்பட்டது பற்றிக் கடந்த அத்தியாயம் விவரித்தது. பக்தர்களின் மீதுள்ள பிரியத்தால், சாயி எப்பொழுதும் அவர்களுக்கு மகிழ்ச்சியையே அளிக்கிறார்.

சாயி பரமதயாள மூர்த்தியாவார். தேவை அன்னன்னிய (வேறெதிலும் நாட்டமில்லாத) பக்தி ஒன்றே. பக்தர் சிரத்தையும் அன்பும் உடையவராக இருந்துவிட்டால், விரும்பியதை அடையவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஸ்ரீகிருஷ்ணர் உத்தவரிடம் கூறியிருக்கிறார், "சத்குரு என்னுடைய உருவமே என்று அறிவீராக". சத் குருவிடம் காட்டும் பக்தியும் பிரீதியும் அக்கூற்றிற்கு ஏற்பவே இருக்கவேண்டும். அதுவே அன்னன்னிய பக்தி.

ஸ்ரீசாயியின் சரித்திரத்தை எழுதவேண்டுமென்ற மனோரதம் எனக்கு உள்ளிருந்து எழுந்தது. அவருடைய அற்புதமான லீலைகளை என்னை எழுதிவைத்து என்னுடைய ஆவலை சாயி நிறைவேற்றி வைக்கிறார். கேட்பதற்கு அதியற்புதமாக இருக்கின்றன அல்லவா சாயியின் லீலைகள்?

ஆழ்ந்த சாஸ்த்திர ஞானத்தால் விளையும் புலமையும் மேலாண்மையும் எனக்கு இல்லாமலிருந்த போதிலும், பாமரனாகிய எனக்கு உள்ளுணர்வு ஊட்டி இக்காவியத்தை என் கைப்பட எழுத வைக்கிறார். உண்மையான பக்தர்களுக்கு விழிப்பு ஏற்புடுத்துவதே அவருடைய உள்நோக்கமாகும்.

"குறிப்புகள் எடுத்துக்கொள்" எண்டு அல்ப பிரக்ஞனாகிய (சிறுமதியோனாகிய) நான் ஆணையிடப்பட்டேன். அப்பொழுதே என்னுடைய புத்தியில் தைரியமும் ஞானமும் புகுந்து கொண்டன.