valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 6 July 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"ஆனால், அவர் கோ சம்ரட்சண நிமித்தமாகவும் பசுக்களுக்குத் தீனி வாங்க நிதி திரட்டுவதற்காகவுமே வந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே நான் உத்தியாபன விழாவிற்கு வருகை தரும்படி பாபாவுக்கு அழைப்பு அனுப்பினேன்.

"இவ்விதமாக என் மனம் மயங்கிய காரணத்தால்தான் எல்லாம் இவ்வாறு நடந்தது. அவர் இரண்டு பேர்களுடன் சேர்ந்து வந்து போஜனம் செய்துவிட்டுச் சென்றாராயினும், அவரை அன்னத்தை நாடிவந்த வழிப்போக்கர் என்று நான் நினைத்துவிட்டேன். -

"எதிர்பாராது போஜனநேரத்தில் இரண்டு பேர்களுடன் வந்தவர், எனக்கு ஏற்கெனவே அறிமுகமாகாதவராக இருந்திருந்தால், அவர் சாயி என்று நான் நிச்சயமாக அறிந்துகொண்டிருப்பேன்."

ஆனால், ஞானிகளின் ரீதி இவ்வாறே.  அவர்களுடைய கற்பனைக்கெட்டாத லீலைகளும் அற்புதச் செயல்களும் இவ்வாறே. பக்தர்களின் இல்லத்தில் என்னென்ன நடக்கவேண்டுமென்பதை அவர்கள் முன்கூட்டியே நிச்சயிக்கிறார்கள்.

பாதங்களை பணியும் பக்தர்களுடைய இல்லங்களில், எதிர்பாராமலேயே மங்கள நிகழ்ச்சிகள் இம்மாதிரியாக வெற்றிகரமாக நிறைவேறுகின்றன. சாதுக்களின் செயல்கள் புரிந்துகொள்ளமுடியாதவை.

சிந்தாமணி நாம் கேட்பதைக் கொடுக்கும். கற்பக விருட்சம் நாம் மனத்தில் நினைப்பதைக் கொடுக்கும். காமதேனு நாம் ஆசைப்படுவதை உற்பத்தி செய்யும். ஆனால், குருவாகிய தாயோ நாம் நினைத்தே பார்க்காதவற்றையும் அருள் செய்வார்.

இந்த சந்தர்ப்பத்தில் பாபா விருந்துக்கு அழைக்கப்பட்டார்; சந்நியாசி ரூபத்தில் வந்தார். சில சந்தர்ப்பங்களில் அழைக்காமலும் வந்து அற்புத லீலை புரிந்தார்!

சில சமயங்களில் புகைப்பட உருவத்தில் - சில சமயங்களில் களிமண் பொம்மை உருவத்தில் - அவருடைய கிருபைக்கு எல்லையேயில்லை! சில சமயங்களில் தாமே தோன்றினார்!

இது சம்பந்தமாக என்னுடைய அனுபவத்தைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியமடைவீர்கள். இந்த விநோதமானதும் அபூர்வமானதுமான காதையிலிருந்து, கதைகேட்பவர்கள் சாயி லீலையின் பிராபவத்தை அறிவர்.

சிலர் இவ்வாறு சொல்லலாம், "இதுவென்ன உண்மையாக நடந்த நிகழ்ச்சியா, கற்பனைக் கதையா?" அவர்கள் விரும்பியவாறு ஏதாவது சொல்லட்டும்; நீங்கள் பயபக்தியுடன் காதையைக் கேளுங்கள்.

சோம்பலும் நித்திரையும் அயர்ச்சியும் ஒதுக்கிவைக்கப்பட வேண்டும். 'முழுக்கவனுத்துடன் கேள்வி' என்னும் தானத்தை எனக்களித்தால்தான் நான் திருதியுறுவேன்.

சிறிது நேரம் சலனங்களைத் தூர விரட்டிவிட்டு மனத்தை சமநிலைப்படுத்தினால்தான் கேள்வி சிறப்புறும். மனத்தில் அசைபோடுதலும் சிந்தனையும் தொடரும்.

அதன் பிறகு நேரிடை அனுபவம் ஏற்படும். இவை அனைத்திற்கும் கேள்வியே (காதால் கேட்டலே) ஆதாரம்; கேள்வியே சாரம். அதை வைத்து, நிச்சயமாகப் பிறவிக்கடலைத் கடந்துவிடலாம்.