ஷீர்டி சாயிசத்சரிதம்
ஆகவே, அடியேன் வணக்கம் செய்து
சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்
விடுக்கிறேன். பயபக்தியுடன் கேளுங்கள்.
நாம் உத்தமர்களுடைய
சங்கத்தையே நாடுவோமாக. குருவின் பாதங்களில் சுயநலம் பாராத அன்பு
செலுத்துவோமாக. குருவின் புகழைப் பாடுவதில் பேரார்வம் காட்டி நிர்மலமான
பக்தியைப் பெருக்குவோமாக!
குருவிடம் என்றும் பிளவுபடாத அன்பை
வளர்ப்போம். நம்முடைய சினேகபாசம் என்றும் அறுபடாதிருக்கட்டும். பக்தர்கள்
சுகத்தையும் சந்தோஷத்தையும் அனுபவித்துக்கொண்டு இரவு பகலாக குருவின்
பாதங்களில் மூழ்கட்டும். (நிற்க)
சிறிது நேரம் கழிந்த பிறகு,
பாபாவின் சிஷ்யர்களும் எல்லா கிராம மக்களும் பாபாவின் பூதவுடலை என்ன
பண்ணுவது சிறப்பு என்று நிச்சயம் செய்வதற்காக கலந்து ஆலோசித்தனர்.
பெரும்பக்தரான
ஸ்ரீமான் புட்டீ, நடக்கப்போகும் சம்பவத்திற்கு ஒரு நினைவுச்சின்னம் போல
ஓர் அழகிய விசாலமான மாளிகையை ஏற்கெனவே கட்டியிருந்தார்.
பின்னர்,
பாபாவின் பூதவுடலை எங்கு அடக்கம் செய்வது என்ற விஷயம் பற்றி முப்பத்தாறு
மணி நேரம் விவாதம் நடந்தது. கடைசியில், எது நடக்கவேண்டுமென்று இருந்ததோ
அதுவே நடந்தது.
ஒருவர் கூறினார், "இந்துக்களை பாபாவின் உடலைத்
தொடுவதற்கும் அனுமதிக்கக்கூடாது . முசல்மான்களின் கபரஸ்தானத்திற்கு
(இடுகாட்டிற்கு ) சடங்குபூர்வமான ஊர்வலமாக எடுத்துச் சொல்வோம்."
மற்றொருவர்
கூறினார், "பூதவுடல் திறந்தவெளியில் வைக்கப்படவேண்டும். ஓர் அழகிய சமாதி
கட்டுவோம். அங்கேயே அது நிரந்தரமாக இருக்கட்டும்."
குஷால் சந்தும்
அமீர் சக்கருங்கூட அவ்வாறே நினைத்தனர். அனால், "இந்த சரீரத்தை வாடாவில்
வையுங்கள்" என்பவையே பாபா திணறித் திணறிப் பேசிய கடைசி வார்த்தைகள்.
ராமச்சந்திர
பாட்டீல் என்னவோ, மிகக் கறாராக இருந்தார். அவர் கிராம அதிகாரிகளில்
ஒருவர். பாபாவிடம் பிரேமை மிகுந்த தொண்டர். அவர் கிராம மக்களிடம்
சாற்றினார்.
"உங்களுடைய சிந்தனைகள் எப்படியிருந்தாலும் சரி, அவை
எங்களுக்கு அடியோடு ஒப்பிதம் இல்லை. சாயியை புட்டீ வாடாவிற்கு வெளியேயோ
வேறெங்குமோ கணநேரங்கூட வைத்திருக்கக்கூடாது. "
இந்துக்கள்
அவர்களுடைய தர்மசாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள படியும், முசல்மான்கள்
அவர்களுடைய மதநெறிகளின் பிரகாரமும், எது செய்யத் தகுந்தது, எது செய்யத்
தகாதது , என்பது பற்றி இரவு முழுவதும் பேசித் தீர்த்தனர்.
அங்கு, அவருடைய வீட்டில் லக்ஷ்மன் மாமா தூங்கிக்கொண்டிருந்தபோது, விடியற்காலை நேரத்தில் பாபா அவருடைய கனவில் தோன்றி அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு, "சீக்கிரமாக எழுந்து வாரும்" என்று சொன்னார். -