valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 5 April 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

கோபக்காரரான இவர் கடுஞ்சொல்லர்; இதமாகப் பேசத் தெரியாதவர். தாம் பேசுவது நல்லதா, கெட்டதா - முறையானதா, முறையற்றதா - என்று யோசியாமல், மற்றவர்களுடைய மனம் புண்படுவதுபற்றிக் கவலைப்படாமல் தமக்கு என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாகவும் கபடமற்றும் கொட்டிவிடுவார்.

இயற்கையாகவே முரடரும் கண்டிப்பு மிகுந்தவருமாகிய இவர், மிக நேர்மையானவர்; யோக்கியவர்; வஞ்சனை தெரியாதவர்; சாத்விகர். ஆனால் செயல்பாட்டில், எப்பொழுது வெடிக்குமோ என்று பயப்பட வேண்டிய, தோட்டாக்கள் நிரம்பிய கைத்துப்பாக்கியை ஓத்திருந்தார்.

எல்லாச் செயல்களையும் 'தடபுட' வென்று செய்துவிடுவார். எதுவும் அங்கேயே, அப்பொழுதே, முடிய வேண்டும். தள்ளிப்போடுவது கடன் என்ற பேச்சோ கிடையாது. மற்றவர்களைப்பற்றிய சிந்தனையே இல்லாது, எல்லா விவகாரங்களிலும் தயவு தாட்சண்ணியம் பார்க்காது நேரம் தவறாது செயல்பட்டார்.

எரியும் தணலையும் கையிலேந்தி விடலாம்; அண்ணா சிஞ்சணிக்கரின் சுபாவத்தை எதிர்கொள்ள முடியாது. இவ்வளவு முரட்டுத்தனமான மனிதராக இருந்தாலும் அவர் கபடமற்றவர்; நேர்மையானவர். இக் காரணம் பற்றியே பாபா அவரிடம் ப்ரீதி கொண்டிருந்தார்.

ஒருநாள் பிற்பகல் நேரத்தில், பாபா தம்முடைய இடக்கையை மரக்கிராதியின் மேல் வைத்துக்கொண்டு மசூதியில் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி மக்கள் கூடியிருந்தனர்.

பாபா அம்மாதிரியான நேரங்களில், என்ன நடக்கிறது என்பதில் ஆர்வமில்லாதவர் போன்றும் எதிலும் ஈடுபடாதவர் போன்றும் அமைதியாக உட்கார்ந்திருப்பார். ஆனால், யாருமே அறியாத வகையில் பக்தர்களுக்கிடையே சச்சரவு மூட்டிவிடுவார். சம்பந்தப்பட்டவர்கள் சிடுசிடுப்புடன் அவ்விடத்தில் இருந்து வெளியேற முயல்வர். கடைசியில் இருதரப்பினரையும் பாபா சமரசம் செய்துவிடுவார்.

சில பக்தர்கள் அவருடைய உடலின் இரு பக்கங்களையும் பிடித்துவிடுவார். சிலர் பாதசேவை செய்வர். சிலர் முதுகையும் சிலர் வயிற்றுப் பகுதியையும் மசாஜ் செய்துவிடுவர். எல்லாருமே ஏதாவது ஒரு வகையில் பாபாவுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்று விரும்பினர்.

பாபா ஒரு பால பிரம்மச்சாரி; ஊர்துவரேதசர் (விந்து மேல்நோக்கியே செல்லும் தன்மையுடையவர்); தூய நடத்தையுள்ளவர். ஆகவே, அவர் ஆடவர்கள் பெண்மணிகள் இருபாலாரையுமே தமக்கு சேவை செய்ய அனுமதித்தார்.

அண்ணா சிஞ்சணிகர் மரத்தாலான கிராதிக்கு வெளியில் நின்றுகொண்டு குனிந்து மெதுவாக பாபாவின் இடக்கையை பிடித்துவிட்டு கொண்டிருந்தார். வலப்பக்கம் என்ன நடந்தது என்பதை கவனமாக கேளுங்கள்.

அங்கு ஒரு பெண்மணி இருந்தார். பாபாவிடம் அனன்னிய (வேறெதிலும் நாட்டமில்லாத) பக்தி கொண்டவர். பாபா அவரை 'அம்மா' என்று அழைப்பார். மற்றவர்கள் மாவாசிப்பாயி (தாயுடன் பிறந்தவர்) என்று அழைத்தனர்.

மாவாசிப்பாயி என்று மக்களால் விரும்பி அழைக்கப்பட்டாலும், அவருடைய இயற்பெயர் வேணுபாயி கௌசல்கி. சாயி பாதங்களில் ஈடிணையற்ற பக்தி கொண்டிருந்தார்.