valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 18 April 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பக்தர்களுக்குக் கைதூக்கி வாழ்த்துக் கூறியவர் தம்முடைய பூதவுடலை ஷிர்டியில் நீத்துவிட்டபோதிலும், நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் நிறைந்திருக்கிறார். லீலைக்காக அவதாரம் எடுக்கக்கூடிய சாமார்த்தியமுடையவர் அல்லரோ!

'சமர்த்த ஸாயிதான் பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிட்டாரே, இப்பொழுது ஷிர்டியில் என்ன இருக்கிறது?' இது போன்ற சந்தேகங்களுக்கு மனத்தில் இடமளிக்க வேண்டா. ஏனெனில், ஸ்ரீ சாயி மரணத்துக்கு அப்பாற்பட்டவர்.

ஞானிகள், பரோபகாரம் கருதி கர்ப்ப வாசம் இல்லாமல் தம்மைத்தாமே வெளிப்படுத்திக்கொள்ளக் கூடியவர்கள். ஞானிகள் பாக்கியவந்தர்கள்; பிரம்ம சொரூபமானவர்கள்; உருவமேற்று அவதாரம் செய்பவர்கள்.

அவதார புருஷர்களுக்கு ஜனன நிலையும் இல்லை; மரண நிலையும் இல்லை. வந்த வேலை முடிந்தவுடன் சொந்த ரூபத்திற்குத் திரும்பித் தோன்றாநிலையில் ஒன்றிவிடுகின்றனர்.

மூன்றரை முழ நீள உடல்தானா பாபா? அவருக்கு ஓர் உருவத்தையோ குறிப்பிட்ட வண்ணத்தையோ கற்பிப்பது அயுக்தமான (பொருத்தமில்லாத) பேச்சு அன்றோ?

அணிமா, கரிமா ஆகிய எட்டு மஹா சித்திகள் அவர் வருவதாலும் போவதாலும் குறைவதுமில்லை; நிறைவதுமில்லை. அகண்டமான சம்ருத்தி (நிறைவு) அவருக்குச் சொந்தமானது. அதுவே அவருடைய புகழ்.

இம்மாதிரியான மஹானுபாவர்களின் உதயம் உலக மங்களத்திற்காகவே. உதயம் நீடித்தலிலும் நிற்றலிலும் ஒரு தொடர்ச்சியைக் காணலாம். ஞானிகள் உலக மக்களைக் கைதூக்கிவிட எப்பொழுதும் தயார்.

ஆத்மாவில் ஒன்றி, அழிவில்லாத நிலையில் இருக்கும் இவர்களுக்கு ஜனனம்பற்றிய  பிராந்தியும் (மனா மயக்கமும் ) மரணம் பற்றிய பிராந்தியும், கனவில் ஏற்படும் சுகங்களையும் சம்பத்துக்களையும் போலாகும்.

இதையே வேறுவிதமாக பார்த்தாலும், ஞானச் சுரங்கமாகவும்  ஆத்மாவில் மூழ்கியவராகவும் வாழ்பவருக்கு, உடலைப் பேணுதலும் வீழ்த்துதலும் சரிசமானம்.

ஆக, அவர்களனைவரும் மலைபோன்ற துக்கத்தில் அமிழ்த்திவிட்டு பாபாவின் உயிரற்ற உடல் சாய்ந்தது. ஷீர்டி கிராமமெங்கும் 'ஹாஹா' என்ற அவல ஓலம் கட்டுக்கடங்காமல் எழும்பியது.

பாபா நிர்யாணம் அடைந்த செய்தி கிராம மக்களை அம்புபோல் துளைத்தது. தினசரி நடவடிக்கைகள் தடங்கி நின்றன. கலவரமடைந்த மக்கள் சிதறி இங்குமங்கும் திசை தெரியாது ஓடினர்.

அமங்கலச் செய்தி பரவி, மக்களின் தலைமேல் இடிபோல் விழுந்தது. சிந்தனையாளர்கள் திகைப்புற்று அமர்ந்தனர். மற்றவர்கள் ஓலமிட்டு அழுதனர்.

பேரன்பாலும் பொங்கும் துக்கத்தாலும் தொண்டை அடைத்தது; கண்களில் நீர் பெருகியது. மக்கள் 'சிவ சிவ ஹரே' என்று புலம்பினர்.