valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 25 May 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பாலாசாஹேப்  தேவ் என்று பெயர் கொண்டவர் பாபாவின் பரமபக்தர். சாயி பாதங்களில் சிறந்த நிட்டை வைத்திருந்தவர். தேவின் தாயார் தம்முடைய நன்மைக்காகவும் எல்லோரின் நல்வாழ்வுக்காகவும் விரதங்களை அனுஷ்டிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.

ஒருசமயம், தேவின் தாயார் பல விரதங்களை முடித்திருந்தார். விரதங்களை நிறைவுபெறச் செய்வதற்காக கொண்டாடப்படவேண்டிய உத்தியாயன (நிறைவு) விழா பாக்கியாக இருந்தது.

விரதங்களின் எண்ணிக்கை பூரணமடையும்போது உத்தியாபன விழா கொண்டாடப்பட வேண்டும். இல்லையெனில் விரதங்கள் பூரணமடையாமல் புண்ணியம் சேராது போய்விடும்.

இருபத்தைந்து - முப்பது விரதங்கள் முடிந்ததை முன்னிட்டு கொண்டாடப்படவேண்டிய உத்தியாபன விழாவிற்கு, நூறு-இருநூறு பிராமணர்களை தேவ் விருந்திற்கு அழைத்திருந்தார்.

உத்தியாபன விழாவிற்கு நாள் குறித்து பாபாவைத் தம்முடைய சார்பில் விருந்திற்கு அழைப்பதற்காக ஜோக் கிற்குக் கீழ்கண்டவாறு பிரார்த்தனை செய்யச்சொல்லி ஒரு கடிதம் எழுதினார்.

"நீங்கள் வாராது போனால் உத்தியாபனம் சிறப்பாக முடிவு பெறாது. ஆகவே, பணிவுள்ள சேவகனாகிய என்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அருள்செய்யுங்கள்.-

"நானோ வயிற்றுப் பிழைப்புக்காக அரசாங்கத்திற்கு பணி செய்பவன். என்னால் முடிந்த அளவிற்கு ஆன்மீக சாதனைகளையும் செய்கிறேன். இது விஷயம் உங்கள் மனதிற்கே நன்கு தெரியும்.- (பி. வி . தேவ் டஹானுவில் தாசீல்தாராக வேலை செய்துவந்தார். )

"ஆகவே, டஹானுவிலிருந்து நெடுந்தூரம் ஷிர்டிக்கு வருவதென்பது என்னுடைய சக்திக்கு மீறிய செயல். ஆயினும், என்னுடைய அழைப்பைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசையும் நம்பிக்கையும்."

பாபுசாஹெப் ஜோக் கடிதம் முழுவதையும் பாபா கேட்குமாறு படித்தபின் அவரிடம் சொன்னார், "தேவுக்கு உதவி செய்யுங்கள். உத்தியாபன விழாவைச் சிறப்பாக நிறைவேற்றிக்கொடுங்கள்."

தூய்மையான மனத்துடன் அனுப்பப்பட்ட அந்த அழைப்புக் கடிதத்தை முழுக்கக் கவனமாகக் கேட்டபின் பாபா சொன்னார், "யார் என்னை நினைக்கிறாரோ அவரை நான் நிரந்தரமாக ஞாபகத்தில் வைக்கிறேன்.-

"எனக்கு வண்டியோ குதிரையோ ஆகாயவிமானமோ ரயில்வண்டியோ தேவையில்லை. என்னை யார் அன்புடன் கூவி அழைக்கிறாரோ அவருக்கு நான் தாமதமின்றி உடனே தோன்றுகிறேன்.-

"நீரும் நானும் மூன்றாவது நபர் ஒருவரும் ஒன்றுசேர்ந்து போவோம். அவருக்கு அவ்வாறு கடிதம் எழுதுங்கள். அழைப்புக் கடிதம் எழுதியவர் சந்தோஷப்படுவார்."