valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 9 June 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சொர்க்கத்திற்குப்போனாலும்  நரகத்திற்குப் போனாலும் இன்பத்துன்ப அனுபவங்களில் பேதம் ஏதுமில்லை. இந்திரனானாலும் கழுதையானாலும் புலனின்ப அனுபவம் ஒன்றுதான்.

இந்திரன் நந்தவன சுகத்தில் புரள்கிறான்; கழுதை குப்பைமேட்டு சுகத்தில் புரள்கிறது. ஆனாலும், சுகம் என்ற நோக்கில் பார்க்கும்போது இரண்டிற்கும் சிறிதளவும் பேதம் இல்லை.

புண்ணியக் கணக்கு தீர்ந்தவுடன் எங்கிருந்து கீழே விழுந்துவிடுவோமோ, அங்கே செல்வதற்கு எக்காரணத்திற்காகப் பிரயத்தனம் செய்யவேண்டும்?

ஒரு கல்பகாலம் வாழக்கூடிய பிரம்மலோகத்திற்கு என்ன பெருமை? அற்ப ஆயுளாக இருப்பினும் பூலோக வாழ்க்கையே சிறந்ததன்றோ?

குறுகிய ஆயுளாக (பிரம்மலோக கால நிர்ணயத்திற்கு ஒப்பிடும்போது) இருந்தபோதிலும், ஈசுவர அர்ப்பணமாக ஒருகணம் வினையாற்றினாலும் அபயம் (அடைக்கலம்) கிடைக்கிறது.

ஹரியின் கதையையும் குருவின் கதையையும், வர்ணித்தும் ஆடியும் பாடியும் இறைவனைத் தொழும் பக்தர்கள் இல்லாத இடம் எதற்கு உபயோகம்?

முழுமுதற்பொருளும் ஆத்மாவும் ஐக்கியமானவை என்ற விஞ்ஞானமே, என்றும் அழியாத உன்னதமான பேற்றை அளிக்கக்கூடியது. இதைப் பெறுவதற்கு விண்ணில் இருக்கும் சொர்க்கத்தைவிட பூலோகமே சிறந்த இடம்.

உடலாலும் வாக்காலும் மனத்தாலும், ஐந்து பிராணன்களையும் புத்தியையும், உறுதியுடனும் பணிவுடனும் குருவின் ஆதீனத்தில் மொத்தமாக விட்டுவிடுங்கள்.

இவ்வாறு குருவிடம் சரணடைந்த பிறகு சம்சார பயம் பற்றி பேச்சுண்டோ? மொத்தமாகக் களைந்துவிட அவர் இருக்கும்போது, உலகவாழ்வின் விசாரணைகளை பற்றி என்ன விசாரம்!

மாயையும் அஞ்ஞானமும் எங்கு வாசம் செய்கின்றனவோ, அங்கே பிள்ளைகுட்டிகளையும் மாடுகன்றுகளையும் பற்றிய பாசமும்ம் உலகவாழ்வைப்பற்றிய கவலைகளும் இரவுபகலாக ஓய்வின்றி இருக்கும். நல்ல விஷயங்களை பற்றிய சிந்தனை லவலேசமும் (சிறிதளவும்) இராது.

அஞ்ஞானமே பேதமனைத்திற்கும் மூலகாரணம். இக் காரணம்பற்றியே குருவிடம் சென்று சிறந்த ஞானத்தை சம்பாதித்துக்கொள்ள வேண்டும்.

அஞ்ஞானம் நிவிர்த்தியாகிவிட்டால், 'பல உண்டு' என்னும் பேதபுத்தி அணுவளவும் மீதி இருக்காது. 'உள்ளது ஒன்றே' என்ற ஞானத்தைப் பெற்றவன் ஜனனமரணச் சுழலிலிருந்து விடுபடுகிறான்.

ஆயினும், மிக அற்பமான அளவிற்குப பேதக் கருத்தை வைத்திருந்தாலும், அவன் ஜனனமரணச் சுழலில் மாட்டிக்கொள்வான். சிருஷ்டியும் விநாசமும் அவனை விடாது தொடரும்.