valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 28 June 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

கணவன் இவ்வாறு பல குதர்க்க வாதங்கள் செய்து மனைவியைக் கேலி செய்து அவமானப்படுத்தினான். ஆனால், அப்பெண்மணி மனந்தளரவில்லை; ஏனெனில், அவருக்கு அசத்தியமான கற்பனை என்றால் என்னவென்றே தெரியாது.

அப்பெண்மணி இயல்பாகவே ஆன்மீக நாட்டம் படைத்தவர். அவர் இதற்கு முன்பு பல சமயங்களில் ஸ்ரீராம தரிசனம் திரும்பத் திரும்பப் பெற்று ஆனந்தப் பரவசமடைந்தவர்.

ஆயினும், பிற்காலத்தில் பணத்தின்மேல் மோகமும் பேராசையும் ஏற்பட்டது. பணத்தாசை பிடித்த இடத்தில் இறைவன் எப்படி இருப்பான்? ஸ்ரீராம தரிசனம் நின்றுபோயிற்று! பணத்தாசையின், இயல்பான விளைவு இதுவேயன்றோ?

பாபாவுக்கு ஈதனைத்தும் தெரிந்திருந்தது. பெண்மணியின் பாவச் செயல்கள் அனைத்தும் அழிந்துவிட்டதை நன்கு அறிந்து, மீண்டும் ஸ்ரீராம தரிசனம் அளித்து அருள் செய்தார்.

இந்த அதிசயத்தை எவ்வாறு விவரிப்பேன்! அன்று இரவே அப் பெண்மணியின் கணவர் (மதராஸ் மனிதர்) தூக்கத்தில் பயங்கரமான கனவொன்று கண்டார்.

(சுலோகம் 53 லிருந்து 80 வரை கனவுக்காட்சி. நிகழ்காலத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. (ம.ம.) = மதராஸ் மனிதர்)

அவர் (ம.ம.) ஒரு நகரத்தில் இருக்கிறார். ஒரு போலீஸ்காரர் அவரைக் கைது செய்து கைகளை பின்புறத்தில் கட்டிவிட்டு அவருக்குப் பின்னால் நின்றுகொண்டு கைக்கட்டை தம் கைகளால் மேலும் இறுக்குகிறார்.

அவ்விடத்திலேயே கம்பிபோட்ட சிறைக்கூண்டு ஒன்று இருக்கிறது. பாபா அதற்கு வெளியே ஆடாது அசையாது அமைதியாக நின்றவாறு என்ன நடக்கிறதென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

பாபா அருகில் இருப்பதை பார்த்து, அவர் (ம.ம) சோகமான முகத்துடன் கைகளைக் கூப்பிக்கொண்டு தீனமான குரலில் கேட்கிறார்,-

"உங்களுடைய கீர்த்தியைக் கேள்விப்பட்டு உமது பாதங்களை நாடி வந்தோம். நீங்களே இங்கே பிரத்யக்ஷ்மாக இருக்கும்போது ஏன் இந்தத் துயர நிகழ்ச்சி?"

மஹராஜ் பதில் சொல்கிறார், "நம்முடைய கர்ம வினைகளை அனுபவித்தே தீரவேண்டும்!" அவர் (ம.ம) சொல்கிறார் , " நான் அம்மாதிரி கர்மம் ஏதும் செய்ததில்லை!-

"இவ்வளவு பெரிய கேடு நேருமாளவிற்கு நான் இந்த ஜென்மத்தில் ஏதும் செய்யவில்லை ." மஹராஜ் அப்பொழுது சொல்கிறார், "இந்த ஜென்மத்தில் செய்யாவிட்டாலும் முன்ஜன்மங்களில் செய்திருப்பீர்".

அவர் (ம.ம) பதில் சொல்கிறார், "முந்தைய ஜன்மங்களைப் பற்றி எனக்கென்ன தெரியும்? அப்படியே நான் ஏதாவது செய்திருந்தாலும் உங்களுடைய தரிசனத்தால் அது சாம்பலாகிப் போயிருக்க வேண்டும்?-

"உங்களை தரிசனம் செய்தவுடனே ஏன் என்னுடைய பாவங்கள் தீயிலிடப்பட்ட துரும்புபோல் முழுவதும் எரிந்து சாம்பலாகிப் போய் எனக்கு முக்தியை அளிக்கவில்லை?'