valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 13 September 2018

                                                    ஷீர்டி சாயி சத்சரிதம்

                                          27 . அருட்பெருக்கு - உபதேசம்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

சத் குருவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளும்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பாதங்களையே நாம் வணங்குகிறோம்; கண்கூடாகப் பர ப்ரம்மத்தையே வந்தனம் செய்கிறோம்; பரமானந்தம் அடைகிறோம்.

சமுத்திரத்தில் ஒருமுறை முழுகிவிட்டால், எல்லாப் புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியம் கிடைக்கிறதன்றோ! அதுபோலவே, குருவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டால், சகல தேவதைகளையும் அங்கு அடையலாம்.

ஜய ஜய சத் குரு சாயி! சாயுஜ்ஜிய முக்தி (இறையுடன் ஒன்றிய நிலை) அளிக்கும் கல்பதருவே ஜய ஜய! சத்திய ஞானக் கடலே ஜய ஜய! கதை கேட்பவர்களுக்கு பயபக்தியுடன் கேட்க வேண்டுமென்ற உணர்வை ஊட்டுமாறு வேண்டுகிறேன்.

சாதகப்பட்சி மேகத்தில் இருந்து விழும் நீர்துளிகளாகக் காத்திருப்பதுபோல, ஆன்மீக நாட்டமுள்ள பக்தர்கள் இந்த அமிருத மயமான கதைக்காக காத்திருக்கின்றனர். சகலமான பாபா பக்தர்களுக்கும் இந்த அமிருதத்தை அருந்தி எக்காலத்திலும் சுகத்தை அனுபவிப்பார்களாக !

தங்களுடைய நிர்மலமான கதையைக் கேட்பதால் அவர்களுக்கு உடல் முழுவதும் வியர்த்து கொட்டட்டும். பிரேமையால் விழிகளில் கண்ணீர் ததும்பட்டும்; பிராணன் உமது பாதாரவிந்தங்களில் லயிக்கட்டும்;-

அபரிமிதமான அன்பினால் மனம் கனியட்டும்; பெருமகிழ்ச்சியால் திரும்பத் திரும்ப மெய்சிலிர்க்கட்டும். குடும்பத்துடன் கதை கேட்பவர்கள் உணச்சிவசப்பட்டு விம்மி விம்மி ஆனந்தக்கண்ணீர் பெருக்கட்டும்;-

(கதை கேட்பவர்களுடைய) பரஸ்பர விரோதங்கள் ஒழியட்டும்; பேதங்கள் நலியட்டும். தமக்குள்ளே சோதனை செய்து பார்த்தால், இதுதான் குருவின் கிருபை உண்டாக்கும் எழுச்சியும் விழிப்பும் என்று அவர்கள் நன்கு அறிவர்.

குருவின் கிருபையால் ஏற்படும் எழுச்சியும் விழிப்பும் கண்களுக்கு புலப்படாது. ஏனெனில், அது எல்லா இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டது. மூவுலகங்களிலும் தேடினாலும் சத் குருவை தவிர இதை அளிக்கக்கூடியவர் வேறெவரையும் காண முடியாது.