ஷீர்டி சாயி சத்சரிதம்
"இவ்வாறான சமரசநிலையைக் கண்டவுடன் சித்தம் உருவத்தையும் பெயரையும் மறந்துவிடுகிறது. தன நிஜமான இயல்பால் சுய இயக்கத்தாலேயே என்னைப் பார்க்கிறது. என்னைத் தவிர அதற்கு வேறு இடம் இல்லாமற்போகிறது. -
"நான் ஸ்பர்சவேதி (பரிசனவேதி) இல்லை என்றும், சாதாரணக் கல்தான் என்றும், மக்களுக்கு நிரூபிப்பதற்காக புத்தகப் பண்டிதர்கள் ஆரவாரம் செய்துகொண்டு இரும்புக் கடப்பாரைகளைத் தூக்கிக்கொண்டு வந்தனர். -
"கடப்பாரைகள் என்னைத் தாக்கியபோது, பண்டிதர்களுடைய விருப்பத்திற்கு எதிர்மாறாக அவை பொன்னாக மாறின. நான் வெறும் கல் இல்லை என்பது நிரூபணமாகியது. அந்த அனுபவத்தால் அவர்கள் திகைப்பில் மூழ்கினர்.-
"அணுப் பிரமாணமும் 'நான், எனது' என்ற உணர்வின்றி, உமது இதயத்தில் உறைகின்ற என்னிடம் சரணடைந்துவிடும். உடனே, உம்மிடமிருந்து அவித்யை (அறியாமை - மாயை) விலகும். சொற்பொழிவுகளை மேலும் கேட்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.-
"தேகபுத்தி (உடல்தான் நான் எனும் உணர்வு) அவித்யையின் பிரசவம். தேகபுத்தியிலிருந்துதான் எல்லா மனோவியாதிகளும் உடலுபாதிகளும் தோன்றுகின்றன. தேகபுத்திதான் மனிதனைச் 'செய்ய உகந்தது எது , செய்யத் தகாதது எது' என்னும் சட்டதிட்டங்களின்மீது மோதச் செய்கிறது. இம் மோதல் ஆத்மசுத்திக்குத் தடையாகும். -
"நான் இப்பொழுது எங்கிருக்கிறேன்? உம்மை எப்படி சந்திக்க வருவேன்? என்றெல்லாம் நீர் கேட்கலாம். ஆனாலும், நான் உமது இதயத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். ஆகவே, பிரயாசை ஏதுமின்றியே உம்மை சந்திப்பேன். -
"நீர் கேட்கலாம், 'யார் இந்த இதயத்தில் வசிப்பவர்? அவர் எப்படி இருப்பார்? அவருடைய லக்ஷங்கள் (அடையாளங்கள்) யாவை? எந்த சாடையை, குறிப்பை வைத்து நான் அவரை அடையாளம் காணமுடியும்' என்று.-
"இப்பொழுது , யாரிடம் சென்று சரணடைவது? உம்முடைய இதயத்தில் வசிப்பவர் யார்? என்பனபற்றிய தெளிவு நிரம்பிய வியாக்கியானத்தைக் கவனத்தைக் கொடுத்துக் கேளும். -
"இந்த சிருஷ்டி நானாவிதமான உருவங்களாலும் நானாவிதமான பெயர்களாலும் நிரம்பியிருக்கிறது. இவற்றை எவராலும் கணக்கெடுக்கமுடியாது. இவை அத்தனையும் மாயையின் சொரூபங்கள். -
"அதுபோலவே, சத்துவம், ராஜரசம், தாமசம் ஆகிய முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட எந்த மெய்ப்பொருளை உள்ளூர்வால் உமது மனத்தில் உணர்கிறீரோ, அப்பொருளின் உருவத்தையே உமது இதயவாசியமாக அறிவீராக!-
"பெயருக்கும் உருவத்துக்கும் அப்பால் உம்முல் ஒன்று இருக்கிறதே, அதுவே இதயவாசியின் (இறைவனின்) அடையாளம். இதையறிந்து அவனிடம் சரணடைவீராக. -