valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 20 November 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பொதுவாக, ஞானிகளின் கதைகளை ஞானிகளே எழுதுகின்றனர். ஞானிகளின் அருள்வெளிபாட்டைப் பெறாமல் எழுதப்படும் நூலில் சுவை இருக்காது;  வரிக்கு வரி, சோர்வு தட்டும். 

கிருபாமூர்த்தியான சாயிநாதர் என் மனத்துள் புகுந்து அவருடைய சரித்திரத்தை எழுதச்செய்து வாங்கிக்கொண்டார்;  என்னுடைய மனோரதத்தையும் நிறைவுசெய்தார். 

வாய், ஸ்ரீஸாயி நாமத்தை இடைவிடாது ஆவர்த்தனம் செய்யும்போதும், சித்தம் அவருடைய திருவாய்மொழியைச் சிந்திக்கும்போதும், மனம் அவருடைய திருவுருவத்தைத் தியானம் செய்யும்போதும், நான் பூரணமான சாந்தியை அனுபவிக்கிறேன். 

வாக்கில் சாயியின் நாமத்துடனும், இதயத்தில் சாயியின்மீது பிரேமையுடனும், சாயியைப் பிரீதி செய்வதற்காகவே செயல்புரிபவுனுக்கு சாயி பெருமளவில் கடன்பட்டிருக்கிறார்!

சம்சார பந்தங்களை அறுத்தெறிவதற்கு இதைவிட மேலான சாதனம் ஏதும் இல்லை. சாயியின் கதை பரம பாவமானது (தூய்மையளிப்பது);  படித்தாலும் கேட்டாலும் சுகத்தை அளிக்கும். 

கால்களால் சாயியைப் பிரதட்சிணம் செய்யுங்கள். காதுகளால் அவருடைய சரித்திரத்தைக் கேளுங்கள்.  கண்களால் சாயியை தரிசனம் செய்யுங்கள்.  எல்லா அங்கங்களாலும் அவரைப் பிரேமையுடன் ஆலிங்கனம் செய்யுங்கள். (தழுவுங்கள்).

அவருக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யுங்கள். அவருடைய பாதங்களில் சிரம் தாழ்த்துங்கள்.  வாய் அவருடைய நாமஸ்மரணத்தையே  செய்யட்டும்.  மூக்கு அவருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட மலர்களின் (நிர்மாலியத்தின்) நறுமணத்தை நுகரட்டும். 

இப்பொழுது, கதையை விட்ட இடத்தில தொடர்வோமாக.  'அற்புதங்களைக் காண்பதில் ஆவல் அதிகம் காட்டிய பக்தர் ஒருவரின் காதையைச் சொல்லப்போகிறேன்' என்று கடந்த அத்தியாயத்தில் கதைகேட்பவர்களுக்கு ஒரு வாக்கு அளிக்கப்பட்டது. 

உலகியல் நாட்டமோ ஆன்மீக நாட்டமோ இல்லாதவரும், ஞானிகளின் சக்திகளை அறியாதவருமாகிய மனிதர், அவரிடம் வேறொருவர் சொல்லும் விவரணத்தை மனத்தில் நம்பிக்கையின்றிக் கேட்கிறார். 

நண்பர்கள் சாயியின் பெருமைகளைச் சொன்னபோது அவர் குற்றங்காண்பதற்காகவே கேட்டார். இவ்வுலகில் தாமே நேரிடையாக அனுபவித்து உணரமுடியாத எதையும் அவர் நம்ப மறுத்தார். 

அவருடைய பெயர் ஹரி கானோபா. சாயியைத் தாமே சோதித்துப் பார்த்துவிடும் நோக்கத்துடன் அவர் பம்பாயிலிருந்து நண்பர்களுடன் யாத்திரையாகக் கிளம்பினார். 

ஆனால், எல்லாருடைய இதயத்தையும் ஒளிரச்செய்யும் சாயியின் கலைத்திறனையும் புதினங்கள் புரியும் லாவகத்தையும் நிர்த்தாரணமாக எவரால் அறிந்துகொள்ள முடியும்?