ஷீர்டி சாயி சத்சரிதம்
நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் சாயீ நிரம்பியிருக்கிறார். சாயீ எல்லாருடைய அகத்திலும் புறத்திலும் இருக்கிறார். உம்முள்ளேயும் என்னுள்ளேயும் நிரந்தரமாக வசிக்கிறார்.
சமர்த்த சாயீ தீனதயாளர்; பாவத்துடன் பக்தி செய்து வணங்குபவர்களைப் பாலனம் செய்பவர் (பாதுகாப்பவர்); பிரேமைக்காகப் பசியோடிருப்பவர்; அனைத்து மக்களுக்கும் சிநேகிதர்.
நம் ஊனக்கண்களுக்குத் தெரியாதபோதிலும், அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். தம்மளவில் சூட்சுமமாக இருந்தபோதிலும், நம்மை அவர்பால் வசீகரித்து இழுக்கிறார்.
அவருடைய மரணம் ஒரு பாசாங்கு மட்டுமே; நம்மை ஏமாற்றும் ஓர் உத்தியே. பூரணத்துவம் பெட்ரா அவர் பல வேஷங்களில் நடிக்கிறார். உடலை இழந்த நிலையிலிருந்து அவர் அழிவற்ற நிலைக்குச் சென்றுவிட்டார்.
அவருடைய இதயத்தில் கனிந்த அனுராகத்தை (அபரிமிதமான அன்பை - காதலை) கெட்டியாகப் பற்றிக்கொள்வோமாக ! அவருடைய மார்க்கத்தை நன்கு புரிந்துகொண்டு காரிய சாதனை பெறுவோமாக!
சிறந்த மனோபாவத்துடன் அவரைப் பூஜை செய்வோம். பக்திபாவத்துடன் அவரை நினைவில் இருத்துவோம். சகலமான பக்தர்களுக்கும் அனுபவம் கிட்டும். அவர் எங்கும் வியாபித்திருப்பதை பக்தர்கள் உணர்வார்கள்.
ஸ்ருஷ்டி (ஆக்கல்), ஸ்திதி (காத்தல்), லயம் (அழித்தல்) ஆகியவற்றால் ஆத்மாவுக்குப் பயம் ஏதுமில்லை. அது சதாசர்வகாலமும் ஞானமயமாக இருக்கிறது. விகாரங்களுக்கு (தீக்குணங்களுக்கு ) இடமளிப்பதில்லை.
ஆத்மா சுவர்ணம் (பொன்) போன்றது. அலங்காரம் ஏதும் இல்லாவிட்டாலும் சுவர்ணமாகவே இருக்கும். பலவிதமான ஆபரணங்களாக மாற்றப்பட்டாலும் தன்னுடைய 'பொன் தன்மையை' இழக்காது.
எப் பெயர்கொண்ட நகையையும் உருத்தெரியாமல் உருக்கிப் பொன்னாக ஆக்கிவிடலாம். ஆனாலும், பொன்னின் குணம் மாறுபடாது. பொன்னுக்கென்னவோ (பொன்னுக்கு உபமானம் செய்யப்பட்ட ஆத்மாவுக்கென்னவோ) உருவமும் இல்லை; உருவத்தால் ஏற்படும் பெயரும் இல்லை.
அந்தப் பொன்னில் இந்த ஹேமாட் பந்த் முழுக்க முழுக்கக் கரைந்து சீரிய பண்புகள் நிறைந்த சாயீ பாதங்களில் அமிழ்ந்து பிரளயகாலம் வரை வசிப்பானாக!
பின்னர், பதின்மூன்றாவது நாள் ஈமச்சடங்கு செய்யப்பட்டது. பக்த ரத்தினமாகிய பாலா சாஹேப் பாடே, கிராமத்துப் பிராமணர்களைக் கூட்டி உத்தரகிரியைச் செய்ய ஆரம்பித்தார்.
ஆடைகளுடன் ஸ்நானம் செய்துவிட்டுத் தம்முடைய கைகளாலேயே திலாஞ்சலி, தில (எள்) தர்ப்பணம், பிண்டப்பிரதானம் ஆகிய கிரியைகளைச் செய்தார்.
சபிண்டீகரணம் (12 ஆம் நாள் சடங்கு) போன்ற உத்தரகிரியைகளும் மாசிகங்களும் (ஒரு வருடம் முடியும்வரை மாதாமாதம் செய்யவேண்டிய சடங்குகளும்) சாஸ்திர விதிகளின் படியும் தர்மநியாயப் பிரமாணத்தின்படியும் சரியான சமயங்களில் செய்யப்பட்டன.