valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 1 September 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

பின்னர் பக்தர்கள் ஒன்று சேர்ந்து சாவடிக்குள் செல்வர். தாத்யா, பாபாவின் ஆசனத்தைத் தயார் செய்துவிட்டு பாபாவைக் கையைப் பிடித்து அழைத்துவந்து உட்கார வைப்பார்.

சாய்ந்து உட்காருவதற்காக, பஞ்சடைக்கப்பட்ட நீண்ட திண்டுடன் விளங்கிய இந்த உன்னதமான ஆசனத்தில் பாபா அமர்ந்தவுடன் அவருக்கு மேலாக ஒரு நீளமான அங்கவஸ்திரம் அணிவிக்கப்படும்.

மகிழ்ச்சி பொங்கும் இதயத்துடன் திவ்வியமான ஆடைகளை அணிவித்தபின் மக்கள் பக்தியுடன் பூஜை செய்வர். அவருக்கு மாலைகளை அணிவித்தபின் ஆரதிப் பாட்டை உறக்கப் பாடுவர்.

மணம் கமழும் சந்தனத்தை இடுவர். கைகளில் வாசனை திரவியங்களை பூசுவர். அழகான ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிவிப்பர். கடைசியாக, ஒரு கிரீடத்தை தலைமேல் பொருத்துவர்.

சிலசமயங்களில் பொன்னாலான கிரீடம்; சிலசமயங்களில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டதும் மயிற்பீலி செருகப்பட்டதுமான தலைப்பாகை. தொண்டைக்கு நேராக வைரமும் மாணிக்கமும் அணிவிப்பர்.

பிறகு கழுத்திற்கு நல்முத்துமணிமாலைகளை அணிவிப்பர். தீபங்களின் ஒளியில் இவ்வழகான ஆடைகளும் அணிகலன்களும் ஜொலித்த அழகே அலாதியானது.

நெற்றியில் நறுமணம் கமழும் கஸ்தூரியால் கறுப்பு நிறத்தில் ஒற்றைக்கோடு நாமம் இடப்படும். நடுவில் வைஷ்ணவ குல சம்பிரதாயத்தையொட்டி ஒரு கறுப்புநிற வட்டப் புள்ளியும் இடப்படும்.

நுணுக்கமான தங்கச்சரிகை வேலைப்பாடு நிறைந்த, விலையுயர்ந்த, கத்தரிப்பூ நிற அங்கவஸ்திரம் நழுவினால், இரண்டு பக்கங்களிலிருந்தும் ஜாக்கிரதையாகவும் யாரும் அறியாதவாறும் பக்தர்களால் பிடித்துக்கொள்ளப்பட்டது.

அதுபோலவே, தங்கக் கிரீடத்தையோ தலைப்பாகையையோ பின்னாலிருந்து பக்தர்கள் மெலுக்காகவும் ஜாக்கிரதையாகவும் முறைபோட்டுப் பிடித்துக்கொண்டனர்.

தப்பித்தவறி தலையிலிருக்கும் பளு தெரிந்துவிட்டால், பாபா அதைத் தூக்கி எறிந்துவிடுவார் என்பதே பக்தர்களுடைய பயமும் விசாரமும். ஆயினும், பாபாவின் தலையில் மகுடம் அணிவிக்க வேண்டும் என்ற எல்லையில்லாத பிரேமையும் ஆசையும் அவர்களுக்கு இருந்தது.

சார்வார்ந்தர் ஞானியான பாபாவுக்கா அவர்களுடைய தந்திரம் தெரியாமலிருக்கும்? பக்தர்களின் உற்சாகத்திற்கு இடமளித்து, விருப்பப்பட்டே பாபா மௌனமாக இருப்பார்.

பிரம்மானுபவத்தில் மூழ்கியவருக்கு தங்கஜரிகை வேய்ந்த அங்கவஸ்திரம் எதற்கு? உண்மையான சாந்தியின் சோபையால் ஒளிர்பவர்க்கு மணிமகுடம் என்ன அழகு சேர்க்கும்?

ஆயினும், பக்தர்கள் பாபாவுக்கு நானாவிதமாக அலங்காரங்கள் செய்தனர். நெற்றியில் மனோஹரமான சந்தனத் திலகம் இட்டனர்; குங்குமப் போட்டும் இட்டனர்.