valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 11 January 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

"எங்களுக்கு ஒன்றுதான் தெரியும். எந்நேரமும் தங்களுடைய நாமத்தை மனத்தில் இருத்துதல், தங்களுடைய தெய்வீகமான தோற்றத்தை கண்களில் நிலைபெறச் செய்தல், இரவு பகலாகத் தங்களுடைய ஆணைக்குக் கீழ்ப்படிந்து நடத்தல் (ஆகியவையே)-

"ஹிம்சையோ அஹிம்சையோ உங்களுக்குத் தெரியாது; ஏனெனில் சத்தகுருவின் பாதங்களே எங்களுக்குத் தாரகம். ஆணை எதற்காக என்று கேட்பதறியோம்; அதன்படி நடக்கவேண்டியதே எங்களுடைய கடமை. -

"குருவின் ஆணை தெளிவாக இருக்கும்போது, இது செய்யக்கூடிய செயலை, செய்யத்தகாத செயலா, இது இஷ்டமா, அனிஷ்டமா (பிரியமற்றதா) என்றெல்லாம் கேள்வி எழுப்பும் சிஷ்யன் கடமையில் இருந்து வீழ்ந்தவன் என்றே நான் அறிகிறேன். -

"குருவின் ஆணையை மீறுவது என்பது ஒரு ஜீவனின் வீழ்ந்த நிலையாகும். ஆணையை நிறைவேற்றுவது தருமசாஸ்திரத்தின் வழியில் ஒழுகுவதாகும். -

"குருபாதங்களிலேயே சித்தம் நிலைக்க வேண்டும்; பிராணன் இருந்தாலென்ன, போனாலென்ன? எங்களுக்கு குருவின் ஆணையே பிரமாணம். பரிணாமமாக ஏற்படப் போவதையும் கடைசியான முடிவையும் அவரே அறிவார்!

"எங்களுக்கு அர்த்தம் எது, அனர்த்தம் எதுவெனத் தெரியாது. அதுபோலவே, நமக்கு எது நன்மை, பிறருக்கு எது நன்மை என்பதும் தெரியாது. குருவின் காரியார்த்தமாகச் செயல்படவே தெரியும். எங்களை பொறுத்தவரை அதுவே ஆன்மீக லாபம்.

"குருவசனத்தின் எதிரில் விதிமுறைகளும் விலக்குகளும் தடைகளும் வியர்த்தமாக போகின்றன. சிஷ்யனுடைய லட்சியம் குரு ஏவிய பணியைச் செய்வதே; அதனால், ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் குருமாதாவினுடையது."-

"நாங்கள் தங்களுடைய ஆணைக்கு அடிமைகள். யோக்கியமான செயலா, அயோக்கியமான செயலா என்று கேள்வி எழுப்ப மாட்டோம். தேவையானால் உயிரையும் கொடுத்து குருவின் ஏவலை நிறைவேற்றுவோம் ".

சுபாவத்தில் தயை மிகுந்த இதயம் திடீரென கல்லாகிறது! ஒரு முஸ்லீம் செய்ய விரும்பாத செயலை, பிராமணர் ஒருவர் செய்யத் தயாராக இருக்கின்றார்.!

கேட்பவர்கள் நம்புவதற்கு தயங்கும் விஷயம் இது. ஆனால், இந்தப் பரம இரகசியம் குருவினுடையது; ஒருமுறை குருவசனத்திற்கு அடிமை செய்யுங்கள்; இந்த இரகசியம் பளிச்சென்று விளங்கிவிடும்.

பக்தன் ஒருமுறை பூரண விசுவாசத்துடன் குருவின் பாதங்களில் புகலிடம் தேடி தன்னை ஏற்றுக் காப்பாற்றும்படி வேண்டினால், குரு அவனுடைய பாரத்தை ஏற்றுக்கொள்கிறார். அதன் பிறகு அவன் செய்ய வேண்டியது ஏதுமில்லை.

எல்லாவற்றையும் குருவின் பாதங்களில் சமர்பித்துவிட்டவர்க்கு பயமென்பதே இல்லை. குரு அவருக்குத் தன்னம்பிக்கையை அளித்து அக்கறை சேர்ப்பார்.

சிஷ்யர்கள் மூன்று வகைப்படுவர்; உத்தமர், மத்திமர், அதமர். ஒவ்வொரு  வகையினரையும் சுருக்கமாக விவரிக்கிறேன்.