valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 13 March 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

அஞ்ஞானத்தால் செய்யப்பட்ட தீவினைகளால் விளைந்ததும் தோன்றா நிலையில் விதையுள் மறைந்திருப்பதும் பௌதிகமான இருப்பு ஏதும் இல்லாததுமான இம் மரம் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு குணத்தை ஏற்பதுபோல் தெரிகிறது.

இயல்பாகவே அனர்த்தத்தை (கேடுகளை) விளைவிக்கக்கூடிய இம் மரம் அஞ்ஞானத்தில் பிறந்தது. ஆவல்களும் ஆசைகளும் ஏக்கங்களும் தண்ணீராக மாறி, இம்மரத்தைச் சுற்றிச் தேங்குகின்றன; செழிப்பூட்டுகின்றன.

மனைவி, மக்கள், தனம், தானியம் போன்ற பரிவாரங்களை உடைய இம் மரம், மனிதர்களின் மனதில் 'உடலே நான்' என்ற புத்தியுடன் தன்னை ஒன்றுபடுத்திக் கொண்டு அடையாளம் காட்டுவதால், அதையே ஆதாரமாகக்கொண்டு வாழ்கிறது.

சம்சார வாழ்வென்ற இம் மரத்தின் கிளைகள், சகலமான பிராணிகளின் லிங்கபேதத்தால் (ஆண்-பெண் பேதம்) விளைந்தவையே. கர்ம வாசனைகளும் பந்தங்களுமாகிய கீழ்நோக்கி வளரும் விழுதுகளால் தாங்கப்பட்டு, இம் மரம் பரந்து விரிந்து செழிக்கிறது.

சுருதி, ஸ்மிருதி ஆகிய இலைகளால் மூடப்பட்டு, ஐம்புலன்களாகிய கொழுந்துவிட்டு வளரும் இளந்தளிர்களால் செழிப்புற்று, யாகம், தானம் போன்ற சடங்குகளாகிய மலர்கள் பூத்துக் குலுங்கும் இம் மரம், இரட்டைச் சுழல்களெனும் (இன்பம் - துன்பம், வெப்பம் - குளிர் போன்ற இரட்டைகள்) சாறு நிறைந்தது.

இம்மரத்தின் பழங்களுக்கு கணக்கேயில்லை; சகலருக்கும் இம் மரமே பிழைக்கும் வழி ஆகி விட்டது. பூலோகத்திலும் புவர்லோகத்திலும் இம் மரம் இல்லாத இடமே இல்லை.

சிலசமயங்களில் பாடும் கூத்தும் வாத்திய இசையும்; சிலசமயங்களில் விளையாட்டும் சிரிப்பும் அழுகையும் - இவ்வாறே இந்த மிகப் பழமையானதும் தலைகீழானதும் அரச மரம்.

உருவத்தை ஏற்றுக்கொண்ட பிரம்மத்தின் மாயையால் விளைந்த இம் மரத்தைப் பற்றற்ற மனப்பான்மை என்னும் கோடரியால் வெட்டி வீழ்த்திவிடலாம். சத் பாவமே இதற்கு மூலாதாரமென்றும் ஜோதியே இதன் சுபாவமென்றும் அறிக.

பிரம்மமே சத்தியம், சர்வாதாரம். இவ்வுலகம் சொப்பனத்தை போன்றதொரு மாயை. இவ்வுலகத்திற்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை; ஆதாரமும் இல்லை. இந்நிலையில் அது தன்னைத்தானே எப்படிக் காப்பாற்றிக்கொள்ள முடியும்?

பற்றற்றவர்கள் எதை அடைய பலமாக முயற்சி செய்கிறார்களோ, ஞானிகள் எதன்மீது காதல் கொள்கிறார்களோ, மோட்சநாடிகள் இதைத் தேடுகிறார்களோ, சாதகர்கள் எதை நாடுகிறார்களோ -

அதை அடைய விரும்புவர் ஞானிகளின் பாதங்களில் சரணடைந்து, குதர்க்கத்தை வேருடன் களைந்தெறிந்துவிட்டு அவர்களுடைய சொற்படி நடக்கவேண்டும்.

மனத்தின் தாவல்களை மூட்டைகட்டி  வைத்துவிட்டு புத்தியின் சாமர்த்தியத்தையும் போலி ஞானத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு சங்கத்தை விடுத்துப் பற்றற்று, குருபாதங்களையே லட்சியமாகக் கொள்ளவேண்டும்.