valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 23 November 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"வெளியே சாதாரணனைப் போல் கோபத்தின் சிறுமை; உள்ளே பரமானந்தத்தின் பெருமை; இதுவே சாயி. அவருடைய லீலையின் மகிமையைப் பாடுவதற்கு மகத்தான தெய்வபலம் வேண்டும்.-

"தம்முடைய ஆன்மீக முன்னேற்றத்தில் உண்மையான நாட்டம் வைத்திருப்பவர். ஒரு ஞானியின் வசைமொழிகளையும் சாபங்களையும் பூமழை எனக் கருதி ஏற்றுக்கொள்வார். தமக்கு நன்மை நடக்கிறதென்பதைச் சட்டென்று புரிந்துகொள்கிறார் அல்லரோ!" (139 - 152 தேவ் அவர்களின் கூற்று)

கர்ணகடூரமானதும் ஆபாசமானதுமான வசைமொழியைக் கேட்டபோதிலும் தேவ் மனம் கலங்கவில்லை. அவருடைய அந்தரங்கம் பிரேமையினால் பொங்கியது. பூக்களால் பாபா தம்மை அடித்தது போல் உணர்ந்தார்.

பசுவின், பால் நிறைந்த முலைக்காம்புகளிலிருந்து பாக்கியவானுக்குத்தான் பால் கிடைக்கும். மடியிலே ஒட்டிகொண்டிருப்பினும், உன்னிக்கு அசுத்தமான ரத்தம்தான் கிடைக்கும்.

தவளைக்குத் தாமரைக்கொடி அண்டைவீட்டுக்காரன். ஆயினும், மஹா பாக்யசாலியான வண்டு எங்கிருந்தோ வந்து தாமரைமலரிலுள்ள மகரந்தத்தை சுவைக்கிறது. அதிருஷ்டக்கட்டையான தவளைக்கு கிடைப்பதோ சேரும் சகதியும்தான்.

அவ்வாறே, பாக்யவான்களாகிய நீங்களும்! "நானும் நீங்களும் சந்தித்துவிட்டோம். மனத்தில் என்ன தோன்றுகிறதோ அதைக் கேளுங்கள்; சந்தேகங்களை நிவிர்த்தி செய்துகொள்ளுங்கள்." இது சாயியின் திருவாய்மொழி.

"பாபா 'வாசி' என்று சொல்லாமல் நான் ஞானேச்வரியைத் திறக்கப்போவதில்லை என்ற என் முரட்டுப் பிடிவாதமும் எப்படி பாபாவால் நிறைவேற்றப்பட்டது என்பதைக் கவனியுங்கள். -

"ஒரு தாயார் தம் குழந்தையின் ஆசைகளை நிறைவேற்றிச் செல்லங்கொடுப்பதைப் போன்ற இனிமையான அனுபவத்தைப் பெற்ற காதை இது. பக்தியை நிலைபெறச் செய்யும் காதை இது." (தேவ்)

தேவ் மேலும் சொன்னார், "'வாசி' என்று சொன்னதோடு மட்டும் நிறுத்திவிடவில்லை. (இந்துக்களின் பஞ்சாங்கத்தின்படி) அந்த ஆண்டு முடிவதற்குள்ளாகவே என்னுடைய கனவில்  தோன்றி, என்னை நலன் விசாரித்து ஆச்சரியமடையச் செய்தார். விவரம் கேளுங்கள்.-

"அன்று வியாழக் கிழமை; 1914 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி, விடியற்காலை நேரத்தில் சாயி என் கனவில் தோன்றி எனக்கு அருள் செய்தார்.-

"சமர்த்த சாயி என் கனவில் தோன்றினார். வாடாவின் மாடியில் அவர் அமர்ந்திருந்தார். அவர் என்னை விசாரித்தார், 'போதி உமக்குப் புரிகிறதா?' நான், 'இல்லை' என்று பதிலளித்தேன்.-

"அதிலிருந்து இரண்டாவது கேள்வி எழுந்தது, 'அது எப்பொழுது புரியப்போகிறது?' என் கண்களில் நீர் நிறைந்தது. நான் என்ன பதில் சொன்னேனென்று கேளுங்கள்.-