valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Wednesday 26 September 2018

                                                                 ஷீர்டி சாயி சத்சரிதம்

மற்றொரு பக்தருடைய தற்கொலை முயற்சி சாமர்த்தியமான திட்டமொன்றால் முறியடிக்கப்பட்டது. அவரைக் கடைசி நிமிடத்தில், எதிர்பாராதவிதமாக, மரணத்தின் வாயிலில் இருந்து வெளியே இழுத்து நல்வாழ்வளித்தார் பாபா. இது எவ்வாறு நிகழ்ந்ததென்று விவரமும் கடந்த அத்தியாயத்தில் அளிக்கப்பட்டது.

இந்த அத்தியாயத்தில், பக்தர்களுக்கு அருள் செய்வதிலும் அவர்களுக்கு சந்தோஷமும், திருப்தியும் அளிப்பதிலும் அவர்களை மேன்மையுறச் செய்வதிலும் பாபா பிரீதியடைந்த விவரம் சொல்லப்படும்.

பாபா அருள் செய்த பாணியே அலாதியானது. பலனைடையும் பக்தருக்கு தீட்ச்சை (மந்திர உபதேசம்) பெறுகிறோம் என்று தெரியாமற்கூடப் போகலாம். சிலருக்கு கேலிக்கும் சிரிப்பிற்கும் இடையே தீட்சை அளிக்கப்பட்டது. கேட்பவர்கள் இதை நுணுக்கமாக கவனியுங்கள்.

உபதேசம் அளித்ததும் அருள்மழை பொழிந்ததும் அநேக ரீதிகளில் நடந்தன. இதை ஏற்கனேவே இந்நூலில் விவரித்திருக்கிறேன். யாரால் எதை கிரகிக்க (சாரம் வாங்க) முடிந்ததோ, அந்த வழி அவருக்கு உபதேசிக்கப்பட்டது.

வைத்தியர்தான் நோயின் தன்மையையும் மருந்தின் குணத்தையும் அறிவார். இவ்விரண்டையுமே அறியாத நோயாளியோ வெல்லம் தின்னவேண்டுமென்று விரும்புகிறார்.

வெல்லம் இனிப்புதான்; சந்தேகமில்லை. ஆனால், அது நோயாளியின் உடல்நலத்துக்கு கெடுதல் விளைவிக்கும். உண்மை இவ்வாறிருப்பினும், நோயாளி வெல்லம் பெறாமல் கஷாயாத்தை குடிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். கையில் முதலில் வெல்லக் கட்டி வைக்கப்பட வேண்டும்!

நோயாளியிடம் பலாத்காரம் செல்லுபடியாகாது. ஆகவே, வைத்தியர் ஒரு யுக்தி செய்து, முதலில் வெல்லக்கட்டியையும் பிறகு கஷாயத்தையும் கொடுக்கிறார். இவ்வாறு வைத்தியர் காரியத்தை சாதித்து விடுகிறார்.

வெல்லத்தின் தோஷத்தை முறியடிக்கும் வகையில், கஷாயத்தில் முறிவுமருந்தையும் சேர்த்துக் கஷாயத்தின் குணப்படுத்தும் சக்தி குறையாதவாறு வைத்தியர் செய்துவிடுகிறார். பாபாவின் வழிமுறையும் இவ்வாறே!

ஆயினும், இப்படித்தான் ஒவ்வொருமுறையும் செய்தாரென்றில்லை. அவருடைய தீட்சை அளிக்கும் முறையைக் குறிப்பிட்ட பக்தரின் மனோதர்மம், பக்தி, சேவை, பிரேமை, விசேஷ குணம் இவற்றுக்கேற்றவாறு தேர்ந்தெடுத்தார்.

பாபாவின் அற்புதமான லீலைகள் திகைப்பூட்டக் கூடியவை! யாரிடமாவது பிரயமேற்பட்டால், அவருக்கு தீட்சை அளித்து அனுக்கிரகம் செய்வார். அவ்வாறு செய்த சந்தர்ப்பச் சூழ்நிலைகளை பற்றிக் கேளுங்கள்.

யாருக்காவது அனுக்கிரஹம் செய்யவேண்டுமென்று அவருக்குத் தோன்றிவிட்டால், சம்பத்தப்பட்ட பக்தர் அதுபற்றி கனவிலும் நினைத்திருக்கவிட்டாலும் சரி, அவருக்கு வாழ்க்கையில் நிறையுணர்வையும் சாதனைகளால் ஏற்படும் திருப்தியையும் அளித்துவிடுவார். இதுவும் அதிகப் பிரயாசையின்றி நகைச்சுவைக்கும் கேலிக்கும் இடையே நடந்துவிடும்.