ஷீர்டி சாயி சத்சரிதம்
சாமா பதில் கூறினார், "சாயியைப் போன்ற ஓர் ஆபரணத்தை அணியும் பாக்கியம் பெற்றவர் எக்காரணத்துக்காக முகம் கவிழ வேண்டும்? அவர் உயிரோடிருப்பதே வீண்!-
"சாயிபாதங்களில் அமோகமாக (மிகுந்த) சிரத்தை இருக்கும்போது, மனத்தில் ஏன் இந்தக் கலக்கம்? நவநாதர்களுடைய பக்தி பிரபலமாக இருக்கலாம். நம்முடைய பக்தியும் பிரேமையை அடித்தளமாக கொண்டது அன்றோ?-
"ஏக நாதரின் விரிவுரையுடன் சேர்த்து பாகவதத்தின் பதினொன்றாவது அத்தியாயத்தையும், பாவார்த்த ராமாயணத்தையும் தினமும் நீங்கள் வாசிக்கவேண்டும் என்பது உங்களுக்கு இடைப்பட்ட உறுதியான ஆணை அன்றோ?-
"அதுபோலவே, ஹரியின் நாமத்தையும் குருவின் நாமத்தையும் ஸ்மரணம் செய்யவேண்டும் என்பது பாபாவின் ஆணையும் பிரமாணமும் அன்றோ? அதுவே உங்களைப் பிறவிகடலைக் கடக்கவைக்கும். நீங்கள் கவலைப்படுவதன் காரணந்தான் என்னவோ?" இதைக் கேட்ட காகா சிறிது ஆறுதலடைந்தார்.
இருந்தபோதிலும், கத்திமுனையில் நடப்பது போன்ற, நவயோகிகளின் வாழ்நெறியையும் விரதங்களையும் சிறிதளவாவது கடைபிடிக்க முடியுமா என்பதே காகாவின் இடைவிடாத விசாரமாக இருந்துவந்தது.
'நவயோகிகளின் பக்தியே உயர்ந்தது; மிகச் சிறந்தது. எந்த உபாயத்தால் எனக்கு அது சித்திக்கும்? அப்பொழுதுதான் இறைவன் என் அருகில் வருவான்.' இந்த எண்ணமே அவருடைய மனத்தை வாட்டி வதைத்தது.
ஆகவே, உட்கார்ந்திருந்தபோதும் படுத்திருந்தபோதும் இவ்வெண்ணமே அவருடைய மனத்தைக் குடைந்தது; அடுத்த நாள் ஓர் அற்புதம் நிகழ்ந்தது! கதைகேட்பவர்களே, அதைப்பற்றி விரிவாகக் கேளுங்கள்.
அந்த நிகழ்ச்சியின் அற்புதத்தைப் பாருங்கள். அன்று அதிகாலையில் பாகாடே என்னும் குடும்பப் பெயர் கொண்ட ஆனந்தராவ் என்பவர் (முழுப்பெயர் ஆனந்தராவ் பாகாடே) மாதவராவை தேடிக்கொண்டு வந்தார்.
அவர் வந்தது காகா தீக்ஷித் பாகவதம் வாசிக்கும் காலை நேரம். ஆனந்தராவ் மாதவராவின் அருகில் அமர்ந்து தமது கனவின் விசித்திரத்தை விவரிக்க ஆரம்பித்தார்.
இங்கு, போதி வாசிப்பு நடந்துகொண்டிருந்தது. அங்கு, இருவரும் பரஸ்பரம் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தனர். இதன் விளைவாக, வாசிப்பவர், கேட்பவர்கள் இரு சாராரின் கவனமும் சிதறியது.
ஆனந்தராவ் சஞ்சலபுத்திக்காரர். அவர் மாதவராவிடம் சொப்பனத்தை விளக்கிக் கொண்டிருந்தார். இருவரும் இவ்வாறு பாகவதம் கேட்டுக்கொண்டே குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தனர். பாகவத வாசிப்பு ஒருகணம் நின்றது.
காகா சாஹேப் அவர்களை வினவினார், "இப்பொழுது என்ன அற்புதம் நடந்துவிட்டது? நீங்கள் இருவர் மட்டும் மகிழ்ச்சி காட்டுகிறீர்கள். விஷயம் என்னவென்று விவரமாக எங்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாதா?"