valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 13 December 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

காபர்டே சாமானியர் அல்லர்; அவர் ஒரு பெருங்குடிமகன்; பேரறிஞரும் ஆவார். ஆனால், சாயியின் சந்நிதியில் பயபக்தியுடன் கைகூப்பித் தலைவணங்கி நிற்பார்.

ஆங்கிலத்திலும் சிறந்த பாண்டித்தியம் படைத்த காபர்டே, புட்டி, நூல்கர் இம்மூவரைத் தவிர மற்றவர்கள் எவரும் பாபாவின் சந்நிதியில் மௌனத்தை கடைப்பிடித்தார்கள் அல்லர்.

மற்றவர்கள் அனைவரும் பாபாவிடம் உரையாடினர். சிலர் பயமோ பக்தியோ இன்றி வாதாடவும் செய்தனர். இவர்கள் மூவர் மாத்திரம் சந்நிதியில் மௌனவிரதமாக இருந்தனர்.

பேச்சில் மாத்திரமின்றி நடத்தையிலும் இவர்கள் மூவரும் செம்மையாக விளங்கினர். பாபாவின் சந்நிதியில் எப்பொழுதும் தலைதாழ்ந்தவாறே இருப்பர். பாபாவின் திருவாய்மொழியை இவர்கள் செவிமடுக்கும்போது காட்டிய அடக்கமும் பணிவும் பயபக்தியும் விவரணத்திற்கு அப்பாற்பட்டவை.

வித்தியாரண்யர் சமஸ்கிருதத்தில் இயற்றிய பஞ்சதசியை (அத்வைத சித்தாந்த நூல்) காபர்டேவிடம் இருந்து பாடம் கேட்பது ஒரு பெருமையாகவும் கௌவரமாகவும் கருதப்பட்டது. அத்தகைய புலமை வாய்ந்த காபர்டே, மசூதிக்கு வந்துவிட்டால் வாயைத் திறக்கமாட்டார்!

சப்த பிரம்மத்தின் (வேதத்தின்) ஒளி, சுத்த பிரம்மத்தின் பேரொளியின் முன்னிலையில் மங்கிவிடும். பர பிரம்ம மூர்த்தியான சாயியின் எதிரில் வித்தைகள் அனைத்தும் தலைவணங்கி நிற்கும்.

ஷிரிடியில் காபர்டே நான்கு மாதங்களும் அவர் மனைவி ஏழு மாதங்களும் வாசம் செய்தனர். ஒவ்வொரு நாளையும் அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் கழித்தனர்.

காபர்டேவின் மனைவி சாயிபாதங்களின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையும் அத்தியந்த பிரேமையும் உடையவராக இருந்தார். தினமும் மசூதிக்குத் தம்முடைய கைகளாலேயே ஏந்தியவாறு நைவேத்தியம் கொண்டுவருவார்.

இப்பெண்மணி, தம்முடைய நைவேத்தியத்தை பாபா ஏற்றுக்கொள்ளும் வரை உணவைக் கையால் தொடமாட்டார். சாயி மஹராஜ் உணவேற்றுக்கொண்ட பிறகே, தாம் உண்ணச் சொல்வார்.

இவ்வாறிருக்கையில் ஒருநாள் நல்லகாலம் பிறந்தது. பக்தர்களின்பால் தாய்போல் அன்புகாட்டும் சாயி, இப் பெண்மணியின் சிரத்தையும் பக்தியையும் கண்டு மகிழ்ச்சியடைந்து அவருக்கு ஒளிமயமான ஆன்மீக மார்க்கம் காட்டினார்.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வழி; ஆனால், பாபாவின் வழியோ அலாதியானது. கேலிக்கும் சிரிப்பிற்குமிடையே செய்யப்பட்டாலும், அனுக்கிரஹம் பக்தரின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும்.