valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 6 May 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"இப்பொழுது நீங்கள் கவலையை விடுங்கள். இந்த உதீயை எடுத்துக்கொண்டு போய் ரணத்தின் மீது தடவுங்கள். எட்டு நாள்களுக்குள் குணம் தெரியும். இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள். -

"இது சாதாரணமான மசூதி அன்று; ஸ்ரீ கிருஷ்ணனின் துவாரகை. இந்த மசூதியில் காலெடுத்து வைத்தவர் உடனே க்ஷேமத்தையும் ஆரோக்கியத்தையும் திரும்பப் பெறுகிறார். நீங்களே இதை அனுபவத்தில் காண்பீர்கள்!-

"இங்கு வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்ற காலம், நிகழ் காலம் , எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம். உங்களுடைய காரியம் கைகூடும் என்று அறிவீர்களாக."

பிறகு, பாபாவின் ஆணைப்படி வியாதியால் பீடிக்கப்பட்ட சிறுவன் பாபாவின் எதிரில் உட்காரவைக்கப்பட்டான். பாபா அவனுடைய காலைத் தடவி விட்டார்; அவன் மேல் தம்முடைய அருட்பார்வையைச் செலுத்தினார்.

இது தேஹ சம்பந்தமான வியாதிதான்.  சாயி தரினசம், விதியால் விளைவிக்கப்பட்ட ஆபத்துகளையும், நிவாரணமே இல்லாத மனோவியாதிகளிலுங்கூட நிர்மூலமாக்கிவிடுகிறது!

சாயியின் முகத்தைப் பார்க்கப் பார்க்க, சிறுவனின் சகல துக்கங்களும் குறைந்தன. அவருடைய திருவாய்மொழியைக் கேட்டு ரொக்கத்திலிருந்து விடுபட்டுப் பரம சுகம் அடைந்தான். 

பிறகு, நான்கு நாள்களுக்கு அவர்கள் ஷிர்டியில் தங்கினர். வியாதி படிப்படியாகக் குறைந்தது. சாயியின் மீதிருந்த விசுவாசம் படிப்படியாக வளர்ந்தது. 

பின்னர் அவர்கள் மூவரும் பாபாவின் பரிபூரணமான அனுமதியுடன் ஆனந்தம் நிறைந்த மனத்தினராகவும் திருப்தியடைந்தவர்களாவும் கிராமத்திற்குத் திரும்பினர்.

இது என்ன அற்பசொற்பமான அற்புதமா? புரையோடிப்போன ரணம் மறைந்து போயிற்று. செய்யப்பட்ட அபூர்பவமான வைத்தியம், பாபாவின் அருட்பார்வையும் உதீயுமே!

இதுவே ஒரு மஹாபுருஷரின் தரிசன மஹிமை. ஒரு மஹாபுருஷரின் ஆற்றுதல் மொழியையும் ஆசிகளையும் பெறும் பாக்கியம் யாருக்காவது கிடைத்தால், அவருடைய வியாதி நிர்மூலமாகிவிடும். 

இவ்வாறு சிலநாள்கள் கழிந்தன. உதீ ரணத்தின்மீது தடவப்பட்டுக் குடிப்பதற்கும் நீருடன் கலந்து அளிக்கப்பட்டது. ரணம் கொஞ்சங்கொஞ்சமாக ஆறி உலர்ந்துவிட்டது. சிறுவன் ஆரோக்கியமான வாழ்விற்குத் திரும்பினான். 

மாலே காங்வில் இருந்த சிறுவனின் சிற்றப்பா (டாக்டர்) இதைபற்றிக் கேள்விப்பட்டு, சாயிதரிசனம் செய்வதற்கு உற்சாகங்கொண்டார். பம்பாய் செல்லும்போது ஷிர்டிக்குச் சென்று மனவிருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று தமக்குளேயே தீர்மானித்தார். 

அனால், பின்னர் அவர் பம்பாய்க்குப் புறப்பட்டபோது, மாலேகாங்காவிலும் மண்மாதிலும்  சிலர் அவருடைய மனத்தில் விகற்பத்தைக் கிளறிவிட்டனர். டாக்டர் ஷீர்டி செல்லும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டார்.