valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 11 January 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

நோயால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவருடைய சித்தம் பாபாவிடமே இருந்தது. எழுந்திருக்கவோ நடக்கவோ முடியவில்லை. நோய் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது.

இங்கே பாபாவின் முக்கலும் முனகலும் நாளுக்குநாள் இரண்டு மடங்கு ஆகிக்கொண்டிருந்தது. அவருடைய நோயும் சீக்கிரமாக கட்டுக்கடங்காமல் போயிற்று.

பாபாவால் வரும்பொருள் கணிக்கப்பட்ட நாள் வேகமாக நெருங்கியது. பயத்தாலும் கவலையாலும் பாலா சிம்பிக்கு முத்து முத்தாக வியர்த்துக்கொட்டியது. ராமச்சந்திர பாட்டிலின் நிலைமையும் அவ்வாறே.

அவர்கள் நினைத்தனர். 'பாபா சொன்ன வார்த்தை உண்மையாகிவிடும் போலிருக்கிறது. சகுனம் ஒன்றும் சரியாக இல்லை. நோயாளியின் நிலைமை மோசமாகிவிட்டது.

வளர்பிறை தசமி உதித்தது. தாத்யாவின் நாடிதுடிப்புக் குறைந்தது. அவர் இறந்துகொண்டிருந்தார். உறவினர்களும் நண்பர்களும் முகம் வெளுத்தனர்.

பின்னர் நடந்ததோ ஓர் அற்புதம்! தாத்யாவின் உயிருக்கு ஏற்பட்ட கண்டம் விலகியது. தாத்யா பிழைத்துவிட்டார்; போனவர் பாபாதான். தத்யாவைக் காப்பாற்ற தம்முயிரை ஈந்தாரோ!

பாபாவின் திருவாய்மொழி விநோதத்தைப் பாருங்கள். தம்முடைய பெயருக்குப் பதிலாகத் தாத்யாவின் பெயரைக் கொடுத்தார்! உண்மையில், குறிக்கப்பட்ட நேரத்திலிருந்து அணுவளவும் பிசகாமல் தம்முடைய இறுதி பயணத்தைத் துவங்குவதற்கு தயார் செய்து கொண்டிருந்தார்.

நடக்கப்போவதை அனைவர்க்கும் அவர் சூசகம் காட்டியிருந்தார். ஆனபோதிலும், சம்பவம் நடக்கும்வரை யாருக்குமே அது மனத்தில் படவில்லை.

'தாத்யாவின் மரணத்தைத் தவிர்ப்பதற்காக தம்முடைய உயிரை பாபா தியாகம் செய்துவிட்டார்' என்று மக்கள் பேசுகின்றனர். பாபா இவ்விதமான பண்டம் மாற்றும் விளையாட்டு விளையாடினாரா என்பது  அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்!

பாபா தேகத்தை உதிர்த்துவிட்ட தினத்தன்று இரவுநேரத்தில், பண்டரிபுரத்திலிருந்து தாசகணுவின் கனவில் (விடியற்காலையில்) காட்சியளித்தார்.

பாபா கூறியது, "மசூதி இடிந்து விழுந்துவிட்டது; ஷிர்டியின் மளிகை கடைக்காரர்களும் எண்ணெய் வியாபாரிகளும் என்னைத் துன்புறுத்தினர். ஆகவே, நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.- (பாபா உருவகபாஷையில் பேசுகிறார்)

"நான் இங்குவரை வந்தேன். சடுதியாக ஷிர்டிக்கு வாரும்! ஏராளமான வகுள மலர்களால் என்னைப் போர்த்திவிடும். என்னுடைய இந்த இச்சையைப் பூர்த்திசெய்யும்".

இதனிடையே, ஷிர்டியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலமாக, பாபா மஹாசமாதியாகிவிட்ட செய்தியை தாசகணு அறிந்தார். ஒருகணமும் தாமதியாது ஷிர்டிக்குப் புறப்பட்டார்.