valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Saturday 11 July 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

'வெயிலின் கடுமை அதிகமாக இருக்கும் இந்நேரத்தில் நீங்கள் எதற்காக, எங்கே செல்கிறீர்கள்?' நாங்கள் பதில் சொன்னோம், 'காட்டிலும் காட்டின் உட்பகுதிகளிலும் தேடப் போகிறோம் .'-

வண்ஜாரி கேட்டார், 'நீங்கள் எதைத் தேடப்போகிறீர்கள்?' நாங்கள் பதில் சொன்னோம். 'ரகசியமான விஷயங்களை வெளிப்டையாகப் பேசுவது நல்லதில்லை '.-

நாங்கள் அவசரமாக இங்குமங்கும் அலைந்து தவித்ததை பார்த்த வண்ஜாரி மனம் கனிந்தார். அவர் சொன்னார் , 'வனம் அணுகுவதற்கு கடுமையானது; வனத்தின் உட்புறத்தை நன்கு தெரிந்துகொள்ளாமல், இஷ்டம் போல், அலையக் கூடாது. -

'இம்மாதிரி வனங்களுக்குள் போய்வருவதற்கு எப்பொழுதும் ஒரு வழிகாட்டியைத் துணையாக வைத்துக்கொள்ளுங்கள். உச்சிவெயில் வேளையில் ஏன் இந்த சாகசச் செயல்? எதற்காக இந்த சிரமும் ஆயாசமும்?-

'விருப்பமில்லையென்றால் உங்களுடைய ரகசியத் தேடல்பற்றி ஏதும் சொல்ல வேண்டா.  ஆனால்,சிறிது நேரம் உட்காரவாவது செய்யுங்கள். ஒரு சோளரொட்டி  துண்டாவது தின்றுவிட்டுத் தண்ணீர் குடியுங்கள். அதன் பிறகு விருப்பம் போல் செல்லுங்கள். மனத்தில்  சிறிது பொறுமைக்கு இடம் கொடுங்கள்.

அவர் எங்களை மனப்பூர்வமாக கேட்டுக்கொண்டார். ஆயினும் நாங்கள் அவருடைய வேண்டுகோளைத் தூக்கியெறிந்துவிட்டு, அவருடைய அறிவுரையை கேட்காமல் எங்கள் வழி  சென்றோம். ஆனால், பின்னர்க் காட்டினுள் சோர்வுற்றுக் களைத்துப் போனோம்.-

ஓ, நாங்கள் புத்திசாலிகள் அல்லோமோ! நாங்களே வழியை கண்டுபிடிப்போம். வழிகாட்டி எதற்காகத் தேவை?' கர்வத்தால் நாங்கள் இவ்வாறு நினைத்தோம்.-

ஆனால், காடோ மிக விஸ்தீரமானது; வானளாவி ஓங்கியும், பருத்தும் வளர்ந்த மரங்கள் நிறைந்து சூரிய ஒளிக்கதிர்களும் உள்ளே புகமுடியாதபடி இருந்தது. இவ்விடத்தில் வழியின்  போக்கை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்?-

இங்குமங்கும் சுற்றிச் சுற்றி பயனின்றித் திரிந்து, திக்குத்  தெரியாமல் மாட்டிக் கொண்டோம். பின்னர் தெய்வ பலத்தால், எங்கிருந்து கிளம்பினோமோ அங்கேயே வந்து சேர்ந்தோம்.-

தெய்வம் எங்களை வந்த வழியே திருப்பி அனுப்பியது. மறுபடியும் அதே வண்ஜாரியை சந்தித்தோம். அவர் சொன்னார், 'நீங்கள் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தீர்கள் போலிருக்கிறது; சிலசமயங்களில் புத்தியின் சாதுர்யம் செல்லுபடியாவதில்லை!-

'எடுத்த காரியம் சிறியதாக இருப்பினும் பெரியதாக இருப்பினும் வழிகாட்டுவதற்கு ஒருவர் தேவை. மேலும், வெறும் வயிற்றுடன் எதையும் கண்டுபிடிக்க முடியாது. புத்தியும் மிரண்டுபோய்த் தடுமாறும்.-

'இறைவனால் திட்டமிடப்படாது, நீங்கள் வழியில் யாரையும் சந்திக்க முடியாது. ஆகவே, கொடுக்கப்பட்ட அன்னத்தை நிராகரிக்க வேண்டா; உணவுத் தட்டை ஒருபொழுதும் கையால் ஒதுக்கித்த தள்ளாதீர்.-