valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 28 July 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


கரும்பைச் சக்கையாய்ப் பிழிவது போன்ற ஆயாசம் தரும் விவரங்கள் தற்பொழுது போதும்! நமக்கு உடனே வெள்ளம் வேண்டும்! முன்னரே குறிப்பறிவிக்கப்பட்ட ரசமான கதையைக் கேட்க எல்லாரும் ஆவலாக இருக்கிறீர்கள்.

கேட்பவர்களின் இந்த உணர்வை நன்கு அறிந்த நான், நான் சொல்லப்போகும் அற்புதமான கதையை அவர்கள் கவனத்துடன் கேட்கும் வகையிலும் அவர்களுடைய ஆர்வம் மழுங்காத வகையிலும் கதாம்சம் இல்லாத பொதுவான தத்துவ விவரணத்தை இப்பொழுது நிறுத்திக்கொள்கிறேன்.

பாமரனும் மந்தமதி படைத்தவனுமாகிய நான் சொற்களைக் கோர்த்துச் செய்யுள் படைக்கும் திறமை பெற்றவனில்லை. நான் எழுதுவது, என்னுடைய பேனாவை அவருடைய கையால் பிடித்துக்கொண்டு சாயி என்னை எழுதவைப்பதுவே.

சாயி எனக்கு புத்தியைக் கொடுத்திராவிட்டால், அவருடைய சரித்திரத்தை எழுத நான் யார்? ஒரே அவருடைய கதையைச் சொல்லி என்னிடமிருந்து எழுதி வாங்கிக்கொள்கிறார்.

நான் ஏற்கெனவே உறுதியளித்தபடி, சாவடி, கண்டி, பிரசாத விநியோகம் இவற்றைப்பற்றிய கதையை இப்பொழுது தொடர்வோமாக. கதையைக் கவனத்துடன் கேளுங்கள்.

சம்பந்தப்பட்ட கதைகள் ஏதாவது ஞாபகத்திற்கு வந்தால் அவற்றையும் சொல்கிறேன். விவரணத்தைக் கவனமாகக் கேளுங்கள்.

சாயியின் அற்புதமான கதைகள் பாக்கியமளிப்பவை. கேட்பதால் ஏற்படும் விளைவுகளும் பாக்கியமளிப்பவை. மனத்தில் சிந்திக்கச் சிந்திக்க நம்முடன் பிறந்த நற்குணங்கள் மேலோங்கும். சாயிபாதங்களில் சத்பாவமும்  வளரும்.

இப்பொழுது நாம் முதலில் சாவடி வர்ணனை செய்வோம். அலங்கார அணிவகுப்புத் திருவிழாவைபற்றிச் சொற்சித்திரம் ஒன்று வரைவோம். ஒருநாள் விட்டு ஒருநாள் நியமமாக பாபா சாவடியில் உறங்கினார்.

ஒருநாள் மசூதியில் உறங்கினர்; மறுநாள் சாவடியில் உறங்கினார். மஹாசமாதி அடையும்வரை பாபா இரவில் உறங்கும் கிரமம் இவ்வாறு இருந்தது.

பின்னர், 1909 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் தேதியிலிருந்து சாவடி வழிபாடும் பஜனையும் பூஜையும் தொடங்கின.

சாவடியில் நடந்த திருவிழாவை என் புத்திக்கு எட்டியவாறு விவரிக்கிறேன். சாயியின் கிருபை இதற்குத் தேவையான அருள்வெளிபாட்டைத் தந்து என்னுடைய முயற்சியைப் பூரணமாகப் பலனுள்ளதாகச் செய்யும்.

சாவடியில் உறங்கும் முறைநாளன்று பஜனை மண்டலி மசூதிக்கு வரும். பிற்பகல் வேளையிலிருந்தே சபாமண்டபத்தில் பஜனை ஆரம்பித்துவிடும்.

பின்புறத்தில், துளசி பிருந்தாவனத்திற்கு இடப்பக்கத்தில் ஒளிவீசும் ரதம் நிற்கும். பாபா முன்னால் அமர்ந்திருப்பார். மத்தியில் பஜனை பாடும் பக்தர்கள் அமர்ந்திருப்பர்.

ஹரிபஜனையில் ஈடுபாடுகொண்ட ஆடவரும் பெண்டிரும் நேரத்தோடு வந்து சபாமண்டபத்தில் தம் தம் இடங்களில் அமர்ந்துகொள்வர்.