valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 28 January 2021


 ஷீர்டி சாயி சத்சரிதம்

வழியைக் கேட்டு விசாரித்துக்கொண்டு சுலபமாக நானாவின் இல்லத்தைச் சென்றடைந்தார். தாழ்வாரத்தில் சிறிது நேரம் உட்காரலாம் என்று ஆயத்தம் செய்தபோது நானா அவரை உள்ளே வரும்படி அழைத்தார்.

ஒருவரையொருவர் சந்தித்தனர். புவா உடனே உதீயையும் ஆரதிப் பாடலையும் நானாவின் எதிரில் வைத்து, நடந்த விவரங்களையெல்லாம் சொன்னார்.

இதில் அற்புதம் என்னவென்றால், நானாவின் மகள் பிரசவிக்க முடியாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது இந்த உதீ வந்துசேர்ந்தது!

பிரசவம் ஆகவேண்டும் என்பதற்காக, நவசண்டி ஹோமமும் துர்க்கா சப்தசதி பாராயணமும் நடந்துகொண்டிருந்தது. இதையெல்லாம் கண்டா கோசாவி பெருவியப்பில் ஆழ்ந்தார்.

பசியால் வாடியவனுக்குச் சற்றும் எதிர்பாராமல் தட்டு நிறைய சுவையான சாப்பாடும் இனிப்புகளும் கிடைத்தது போலவும், சகோர பட்சிக்கு அமிருதம் கிடைத்தது போலவும் நானாவுக்கு அந்நேரத்தில் உதீ கிடைத்தது. இது நானா உணர்ந்தவாறு.

நானா தம் மனைவியைக் கூப்பிட்டு, சிறிது உதீயைத் தண்ணீரில் கரைத்து மக்களுக்கு கொடுக்கச் சொல்லிவிட்டுத் தாமே ஆரதிப் பாட்டைப் பாட ஆரம்பித்தார்.

உடனே, வீட்டினுள்ளிருந்து செய்தி வந்தது. உதீ கலந்த நீர் உதடுகளில் பட்டவுடனே மகளுக்கு நிவாரணம் கிடைத்தது.

உதீ கலந்த நீர் வயிற்றின் உள்ளே சென்றவுடன் வலி குறைந்தது; மகளுக்குத் தடங்கல் ஏதுமின்றிப் பிரசவம் ஆயிற்று. சுகமகாப் பிரசவம் ஆனது கண்டு அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

நானாவை புவா வினவினார், "வண்டியோட்டி எங்கே? அவனை இங்கேயும் காணோமே? நீங்கள் எனக்காக அனுப்பிய குதிரை வண்டி எங்கே?"

நானா பதிலுரைத்தார், "குதிரை வண்டியா? நான் அனுப்பவில்லையே ! எனக்கு இதைப்பற்றி ஏதும் தெரியாதே. நீங்கள் வரப்போவதே எனக்குத் தெரியாதே; நான் எப்படி குதிரைவண்டி அனுப்புவேன்?"

புவா, குதிரை வண்டிப்பற்றி ஆரம்பித்திலிருந்து கடைசிவரை விவரமாக முழுக் காதையையும் சொன்னார். பாபாவின் தாயினும் சாலப் பரிந்தூட்டும் அன்பை எண்ணி நானா ஆச்சரியமடைந்தார்; மனம் நெகிழ்ந்தார்.

குதிரைவண்டி என்ன! பியூன் என்ன! சாயிமாதாதான் இத்தனை உருவங்களுமெடுத்து நாடகமாடினாள்! பக்தர்களின்பால் கொண்ட அன்பினால், அவர்கள் சங்கடப்படும்போது தக்க தருணத்தில் ஓடோடி வருகிறாள் சாயிநாதா!

இப்பொழுது நாம் நாராயண் ஜனீயின் கதையைத் தொடர்வோம். சிலகாலம் கழிந்த பின்னர் பாபா மஹாசமாதி அடைந்தார்.

1918 ஆம் ஆண்டு நவராத்திரிப் பண்டிகையின்போது, சுபதினமான விஜயதசமியன்று பாபா தம்முடைய தேகத்தை பூமிக்கு அர்ப்பணம் செய்தார்.