ஷீர்டி சாயி சத்சரிதம்
மூச்சும் இல்லை: நாடித் துடிப்பும் இல்லத்தில். உயிர் உடலைத் துறந்துவிட்டாற்போல இருந்தது. மக்களுக்கு அது ஒரு பயங்கரமான நிலைமையாகத் தெரிந்தது. பாபாவுக்கோ அது சுகம் நிறைந்த நிலைமையாக அமைந்தது.
இதன் பிறகு, எப்பொழுதுமே உஷார் மிகுந்த மகால்சாபதி பாபாவின் தலையை மடியில் வைத்துக்கொண்டு இரவுபகலாக விழித்திருந்து பாபாவைப் பாதுகாத்தார்.
'சமாதிக்குழி தோண்டுங்கள்' என்ற சாயியின் திருவாய்மொழியாகவே வந்திருந்தபோதிலும், எவருக்கும் அந்தக் காரியத்தை செய்ய மனம் வரவில்லை.
கிராமத்து சமத்த மக்களும் பாபாவின் சமாதி நிலையைப் பார்க்க அங்கே குழுமினர்; பார்த்து வியப்படைந்தனர். மகால்சாபதி பாபாவின் தலையை மடியிலிருந்து கீழே இறக்க மறுத்துவிட்டார்!
'திடீரென்று பிராணன் போய்விட்டதைப் பார்த்து நாமெல்லாம் அதிர்ச்சியுற்றுக் கல்லாய்ச் சமைந்துபோய்விடுவோம் என்று நினைத்து, மூன்று நாள்களுக்குத் தம்மைப் பாதுகாக்கும்படி சொன்னார். சாயி நம்மை ஏமாற்றிவிட்டார்.' மக்கள் இவ்வாறு நினைத்தனர்;
சுவாசம் நின்றுவிட்டது; இந்திரியங்கள் சம்பந்தம் இழந்துவிட்டன; உயிரோட்டத்தின் அறிகுறியே இல்லை; உயிரொளி மங்கிவிட்டது.
வெளியுலகத்தைப்பற்றிய உணர்வே இல்லை; வாக்கு திட மௌனம் சாதித்தது. 'எப்படி மறுபடியும் பிரக்ங்கை திரும்பப்போகிறது!' என்று வியந்து எல்லாரும் ஆழ்ந்த கவலையுற்றனர்.
சரீரம் உணர்வு பெறவில்லை. இரண்டு நாள்கள் இவ்வாறு கழிந்தன. மௌலவீ, முல்லா, பக்கீர் - அனைவரும் அங்கு வந்து அடுத்து என்ன செய்வதென்று யோசித்தனர்.
ஆப்பா குல்கர்னியும் காசீராமும் வந்தனர். பாபா நிஜமான சுகம் தரும் இடத்திற்குச் சென்றுவிட்டார் என்று உறுதியான முடிவெடுத்தனர். ஆகவே, தேகத்தை நல்லடக்கம் செய்யவேண்டும்.
யாரோ ஒருவர் சொன்னார், "கொஞ்சம் பொறுங்கள்; இந்த அவசரம் நன்றன்று; பாபா மற்ற மனிதர்களைப் போல அல்லர்; பாபாவின் வார்த்தைகள் குறி தவறாதவை ".
உடனே மற்றொருவர் பதில் சொன்னார், "சில்லிட்டுப்போன உடம்பில் உயிர் எப்படித் திரும்பவும் நுழையும்? எவ்வளவு, சிந்திக்கும் திறமையற்ற மக்கள் இவர்களெல்லாம்!-
"சுட்டிக்காட்டப்பட்ட இடத்தில் சவக்குழி தோண்டுங்கள். எல்லா மக்களையும் கூட்டிவாருங்கள். நேரங்கடத்தாது நல்லடக்கம் செய்யுங்கள். வேண்டியவை அனைத்தையும் தயார் செய்யுங்கள்."
இவ்விதமான வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. மூன்று நாள்கள் கழிந்தன. பின்னர், அதிகாலை 3 மணிக்கு பாபா உயிர்த்தெழும் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன.