valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Wednesday 30 May 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

குழந்தை இனிப்புகளை வேண்டுகிறது; ஆனால், தாயோ தற்கு மருந்துக் கஷாயத்தை புகட்டுகிறாள். குழந்தை அழுதாலும் முரண்டுபிடித்தாலும், தான் கொண்ட அன்பினாலும் அக்கறையாலும் தாய் கஷாயத்தை புகட்டியே தீருவாள்.

கசப்பான கஷாயம் சரியான சமயத்தில் பலனைத் தரும். ஆனால், குழந்தைக்கு கஷாயத்தின் நற்குணங்கள் எப்படித் தெரியும்? தாய்க்குத்தான் தெரியும் கஷாயத்தின் அருமை.

தாமு அண்ணா லாபத்தில் ஒரு பங்கை சமர்ப்பிக்கத் தயாராக இருக்கலாம். ஆனால், பாபா இந்த ஆசைகாட்டலுக்கு மயங்கிவிடுவாரா  என்ன? அவருடைய பிரீதியனைத்தும் சுயநலம் பாராத அன்பும் பக்தர்களின் சேமமும் அல்லவா!

பொன்னையும் பொருளையும் ஓட்டாஞ்சலியாக மதித்தவருக்கு லாபத்தில் பங்கு எதற்காக? ஏழை எளியவர்களையும் திக்கற்றவர்களையும் ரட்சிப்பதற்காகவன்றோ ஞானிகள் அவதாரம் செய்கின்றனர்!

யமம், நியமம் ஆகிய அஷ்டாங்க யோகப் பயிற்சிகளை செய்பவரும், சமம் (பொறுமை), தமம் (புலனடக்கம்) ஆகிய நற்குணங்களை உடையவரும் தாம் உண்மையில் ஞானியாவார். மாயையில் இருந்தும் பொறாமையில் இருந்தும் விடுபட்டு மற்றவர்களுக்கு அனுக்கிரஹம் செய்வதற்காகவே வாழ்பவர்தம் ஞானி ஆவார்.

பாபாவுக்கு லாபத்தில் பங்கு கொடுத்துவிடலாம் என்ற தாமு அண்ணாவின் யோசனை அவருடைய ஆழ்மனதில் இருந்த ரகசியமே. ஆயினும், பாபா எல்லாரும் அறியும்படி அவருக்கு அளித்த பதில் என்ன என்பதை கவனமாகக் கேளுங்கள்.

ஒவ்வொரு ஜீவனின் மனோகதியையும் (எண்ண ஓட்டத்தையும்) பாபா அறிந்து வைத்திருந்தார். கடந்த காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் அவருக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாகத் தெரிந்திருந்தது.

தம் பக்தனுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது பாபாவுக்கு நன்கு தெரிந்திருந்தது. சரியான நேரத்தில் தெளிவான வார்த்தைகளால் பக்தனுக்கு எவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் என்பதைக் கேளுங்கள்.

பாபா பிரேமையுடன் சூசகமாக தெரிவித்தார், "இதோ பாரும், இந்த விவகாரத்தில் எல்லாம் என்னை இழுக்காதீர்".  அருமையான வியாபார பேரத்தை பாபா அனுமதிக்கவில்லை என்று தெரிந்துகொண்ட தாமு அண்ணா மனமுடைந்து போனார்.

இருப்பினும், பாபாவின் சொற்களை கேட்ட தாமு அண்ணா உட்பொருளை நன்கு புரிந்துகொண்டார். மனதளவில் பருத்தி வியாபார பேரத்தை கைவிட்டு விட்டுத் தலைகுனிந்து சோகமாக உட்கார்ந்திருந்தார்.

மறுபடியும் வேறொரு யோசனை தோன்றியது. "அரிசி, கோதுமை போன்ற தானியங்களில் வியாபாரம் செய்யலாமா?" இந்த எண்ணத்திற்கு பாபா என்ன பதில் கூறினார் என்று கேளுங்கள்.

"ரூபாய்க்கு ஐந்து சேர் என்று வாங்கி ரூபாய்க்கு ஏழு சேர் வீதம் விற்பீர்!" இந்த வார்த்தைகள் தாமு அண்ணாவை அவமானத்தில் ஆழ்த்தின.