ஷீர்டி சாயி சத்சரிதம்
அவர்கள் எளிய வாழ்வு நடத்தினர்; குழந்தைகளும் அவ்வாறே. குடும்பப் பெண்டிரும் தோஷமற்ற (குற்றமற்ற) ஆச்சாரத்தைக் கடைப்பிடித்தனர். ஆதலின், சக்ரபாணி (விஷ்ணு) அவர்களுக்குக் கடமைப்பட்டவரானார்.
அவர்களில் பாலாராம் ஒருவர்; விட்டல் பக்தர்; புண்ணியசாலி. அரசாங்க தர்பாரில் அவருக்குப் பெரும்மதிப்பு இருந்தது; எல்லாரும் அவரை விரும்பினர்.
1878 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 தேதியன்று இந்த ரத்தினம் ஒரு ராம பக்தரின் மகனாகப் பிறந்தார்.
இவர், பிரசித்திபெற்றதும் பெருமதிப்பிற்குரியதுமான குடும்பத்தில், பம்பாய் நகரத்தில், 1878 ஆம் ஆண்டு படாரே பிரபு வம்சத்தின் அலங்காரமாகப் பிறந்தார்.
இவர் ஐரோப்பியக் கல்வியில் தேர்ச்சி பெற்றபின், வக்கீல் பதவி வகித்து வந்தார். தத்துவ ஞானம் பெற்றவர்; எல்லாராலும் பண்டிதராகக் கருதப்பட்டவர்.
பாண்டுரங்கன்மீது மிகுந்த பிரேமை கொண்டவர்; ஆன்மீக வாழ்வில் உயர்ந்த பற்று வைத்திருந்தார். தந்தையின் இஷ்டதெய்வம் ராமன்; மகன் விட்டலிடம் அடைக்கலம்.
'விரை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?' என்னும் பழமொழிக்கேற்ப, தந்தையின் குணநலன்கள் பாலாராமிடம் அபூர்வமாக வெளிப்பட்டன. சகோதரர்கள் எல்லாருமே பட்டதாரிகள்; தெய்வீக சிந்தனையுடன் தர்ம மார்க்கத்தில் வாழ்க்கை நடத்தினர்.
கவர்ச்சிகரமாகவும் திறமையுடனும் கோர்ட்டில் வாதங்களை முன்வைத்தல், நேர்மையான சிந்தனை, தர்ப்பையின் நுனி போன்ற கூர்த்த மதி, நல்லொழுக்கம் ஆகியவை அவருடைய நற்பண்புகள். இவை மற்றவர்களும் ஆர்வத்துடன் பின்பற்றாத தக்கவை அல்லவோ!
பாலாராம் பெருமளவில் சமூகசேவை செய்தார். தம் இனத்தாரின் விருத்தாந்தத்தை எழுதினார். அவராகவே, ஏற்றுக்கொண்ட அந்த விரதம் நிறைவேறியபின் பரமார்த்த வாழ்வில் முழுமையாக இறங்கினார்.
அதிலும் சிறந்த முன்னேற்றம் கண்டார். ஸ்ரீமத் பகவத் கீதையையும் ஞானேச்வரியையும் கசடற பயின்று, ஆன்மீக விஷயங்களில் வித்துவான் என்று புகழ் பெற்றார்.
அவர் சாயியின் பரம பக்தர். 1925 ஆம் ஆண்டில், இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்தார். அவருடைய சரித்திரத்தின் சுருக்கத்தைக் கேளுங்கள்.
1925 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதியன்று இவ்வுலக யாத்திரையை முடித்துக்கொண்டு விட்டலுடன் இரண்டறக் கலந்துவிட்டார் பாலாராம்.
துரந்தர் சகோதரர்களுக்கு 1912 ஆம் வருடம், ஒரு மங்களகரமான நாளில், ஞானிதரிசனம் செய்ய சாயி தர்பாருக்குச் செல்லும் யோகம் வாய்த்தது.
ஆறு மாதங்களுக்கு முன்பாக, சகோதரர்களில் மூத்தவரான பாபுல்ஜி , வாமன்ராவ் என்பவருடன் சேர்ந்து ஷீர்டி சென்று சாயி தரிசனம் செய்தபின் ஆனந்தமாகத் திரும்பிவந்தார்.






