valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 6 March 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆன்மீக முன்னேற்றத்தை நாடுபவர் திடமான மனத்துடன் அப்பியாசங்களை மேற்கொண்டு சாகசங்கள் பல புரியவேண்டிய பாதையில் புகுந்து, என்றும் நிலையானதும் உயர்வானதுமான இலக்கை அடையவேண்டும்.

மேற்சொன்ன நிகழ்ச்சிகளை விவரிக்கும், அமிருதத்தைவிட ருசியான இக் கதைக்கொத்து, கேட்பவர்களின் மனத்தில் அன்பு தோய்ந்த பக்தியை எழுப்பும்; துக்கங்களை முடிவுக்கு கொண்டுவரும்.

கேட்கவேண்டும் என்று அவலுற்றவர்களுக்கு, இங்கிருந்து விரியும் கதை திருப்தியைத் தரும். சொல்பவருக்கும் கேட்பவர்களுக்கும் ஆத்மானந்தத்தை அளிக்கும். கேட்பவர்கள் அனைவருக்கும் நிறைவு தரும்.

பிரேமை நிரம்பியதும் இவ்வுலக இயல்புக்கு அப்பாற்பட்டதுமான இக் கதையை சாயி என்னை எழுதவைப்பார். மூடனும் பாமரனும் ஆகிய நான் ஒவ்வொரு கட்டத்திலும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவேன்!

கங்கையின் தரிசனத்தால் பாவமும், சந்திர உதயத்தால் வெப்பமும் எவ்வாறு விலகுகின்றனவோ, அவ்வாறே சாயியின் திருவாய்மொழியாக வெளிவந்த இக்கதை பாவத்தையும் துன்பங்களையும் அழித்துவிடும்.

தாம் எவ்வாறு தம் குரவை தரிசனம் செய்தார் என்ற விவரத்தை சாயியின் வாய்மூலமாகவே வெளிவந்தவாறு சொல்கிறேன்; கேளுங்கள்; கவனத்துடன் கேளுங்கள்.

வேதங்களையும் வேதாகங்களையும் அத்யயனம் (மனப்பாடம்) செய்தாலும் ஸ்மிருதியையும் (வாழ்க்கைநெறி நூல்களையும்) சாஸ்திரங்களையும் திரும்பத் திரும்ப வாசித்தாலும் குருவின் அருளின்றி ஞானம் பிறக்காது. இதர முயற்சிகள் அனைத்தும் வீண்.

முதலில் தோன்றா நிலையில் இருந்த ஸம்ஸாரமென்னும் விருட்சம், பிறகு பார்வையால் தோற்றுவிக்கப்பட்டது. ஜனன மரண சோகத்தால் நிறைந்த இம்மரம் அழியக்கூடியது.

இதை வெட்டி வீழ்த்திவிடலாம்; அழியக் கூடியது; ஆகவே மரம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒருசமயம் தோன்றா நிலையிலிருந்து , பின்னர்த் தோற்றுவிக்கப்பட்ட உலகியல் வாழ்க்கை. ஆகவே, விஸ்தாரமான மரம் இதற்கு உவமையாகச் சித்தரிக்கப்படுகிறது.

இப்பொழுது கண்களுக்குப் புலப்பட்டு பின்னர் அழியக்கூடிய இந்த சம்சார விருட்சத்தின் வேர்கள் மேலே இருக்கின்றன! அபாரமான கிளைகளின் எண்ணிக்கையும் வியாபகமும் கற்பனைக்கு அப்பாற்பட்டது.

ஒவ்வொரு கணமும் இம் மரம் மேலும் மேலும் கப்புகளை விட்டுக்கொண்டு விரிந்துகொண்டே போகிறது. தூரத்திலிருந்து பார்க்க ரமணீயமாக (அழகாக) இருக்கும் இம்மரம், அணைத்துக்கொண்டால் அங்கமெல்லாம் முள்மயம்!

வாழைத்தண்டைபோல் இம்மரம் வைரம் இல்லாதது. ஆசைகளும் ஏக்கங்களுமாகிய தண்ணீரை விட்டு வளர்ப்பவர்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும் கானல் நீர்; கந்தர்வ நகரம் (மாய உலகம்).