ஷீர்டி சாயி சத்சரிதம்
கர்மம் (செயல் புரிதல்), அகர்மம் (பற்றின்றி செயல் புரிதல்), விகர்மம் (விலக்கப்பட்ட செயல்களைச் செய்தல்) - இவை எல்லாவற்றின் மருமழும் ஒன்றே. குருவே பரமாத்ம ரூபம். குருவழிபாடே பாகவத தர்மம்.
ஒவ்வொரு அவதாரத்தின் விசேஷ குணங்களை விவரித்து, மஹாவிஷ்ணுவின் சரித்திரத்தை த்ரமிள நாதர் பிரவசனம் (சமயச் சொற்பொழிவு ) செய்தார். நாராயணர், புருஷர் என்னும் பெயரைப் பெட்ரா சூக்குமத்தையும் விளக்கினார்.
பின்னர், பகவானை வழிபடாதவர்களின் கதையைச் சமச நாதர் ஜனகருக்கு விவரித்தார். வேதங்களில் விதிக்கப்பட்ட கர்மாக்களை செய்யாமல் தூக்கியெறிந்தவர்களை சர்வநாசம் தொடரும் என்றும் எடுத்துரைத்தார்.
எல்லாருடைய அந்தரங்கத்திலும் ஹரி வாசம் செய்கிறார். ஆகவே, எவரையும் வெறுக்கக்கூடாது. ஒவ்வொரு பிண்டத்திலும் இறைவனை காணுதல் வேண்டும். ஏனெனில், அவன் இல்லாத இடமேயில்லை!
ஒன்பதாவது சகோதரராகிய கரபாஜனர் கடைசியாக, கிருதயுகத்திலும் திரேதாயுகத்திலும் துவாபரயுகத்திலும் எந்தெந்த மூர்த்திகளை தியானம் செய்யவேண்டும் என்பதைச் சொல்லி ஆன்மீகப் பேருரையை முடித்தார்.
கலியுகத்தில் ஒரே சாதனைதான் உண்டு; ஹரிபாதத்தையும் குரு பாதத்தையும் மனத்தில் இருத்துவது. அச் செய்கையே பிறவி பயத்தை அழித்துவிடும். சரணாகதி அடைந்தவர்களுக்கு உண்மையான அடைக்கலம் ஹரிபாதமும் குருபாதமுமே!
போதி வாசிப்பில் இப் பகுதி முடிந்தபிறகு காகசாஹெப் உரக்கக் கூவினார், 'நவநாதர்களின் செயல்கள் எவ்வளவு அற்புதமானவை! அவர்களுடைய மனோபாவம் கற்பனைக்கெட்டாதது அன்றோ?"
பின்னர் அவர் மாதவராவிடம் கூறினார், "அத்தகைய பக்தி எவ்வளவு கடினமானது! மூடர்களாகிய நாம் எவ்வாறு அந்த சக்தியைப் பெறுவோம்? ஓ! எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இது நிறைவேறப்போவதில்லை !-
"மஹா பிரதாபிகளாகிய (புகழ் பெற்றவர்களாகிய ) நவநாதர்கள் எங்கே? பிறவிப் பாபிகளாகிய நாம் எங்கே? அத்தகைய பக்தி சுலபமா என்ன? சத்தியமும் ஞானமும் சேர்ந்து உருவெடுத்தாற்போன்ற நவநாதர்கள் பாக்கியவான்கள்.-
"அத்தகைய பக்தியை நாம் என்றாவது பெறுவோமா? அதை அடைவதற்குண்டான உபாயந்தான் என்னவோ? எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை; மனோதிடத்தையும் இழந்துவிட்டேன். ஜென்மம் எடுத்து என்ன பிரயோஜனம்!"
'காகா சாஹேப் ஒரு பிரேமையுள்ள பக்தர். அவர் எதற்காக இவ்வாறு பச்சாதாபப்பட வேண்டும்? அவருடைய உறுதியான மனம் ஏன் சஞ்சலப்பட வேண்டும்?' இவ்விதம் சிந்தித்த சாமா மனக்கலக்கம் அடைந்தார்.
சாமா என்பது மாதவராவின் செல்லப்பெயர். காகா சாஹேபிடம் மிகுந்த நல்லிணக்கம் கொண்டவர் சாமா. ஆகவே, அவருக்குக் காகாவின் மனோநிலை பிடிக்கவில்லை. கழிவிரக்கமும் இழிநிலை உணர்வும் காகா சாஹிபை ஆட்கொண்டதை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.