ஷீர்டி சாயி சத்சரிதம்
பக்தர்களையும் பக்தரல்லாதவர்களையும் இரு சாராரையுமே உபத்திரவம் செய்தோம். அதன் விளைவாக சாயிநாதரை இழந்தோம்! அவருடைய வார்த்தைகள் இப்பொழுது ஞாபகத்திற்கு வரும்போது நம்முள் ஓர் அனுதாப அலை எழுகிறது.
மஹராஜ் பக்தர்களிடம் சொல்லியிருந்தார், "எட்டு வயது பாலகனாக மறுபடியும் என்னையே நான் மக்களிடையே வெளிப்படுத்திக்கொள்வேன்".
இது ஒரு ஞானியின் திருவாய்மொழி. யாரும் இதை விருதாவான (பயனற்ற) சொல்லாக நினைக்கக் கூடாது. சக்கரபாணியான மஹாவிஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் இவ்வாறுதான் செய்தார்.
சுந்தரமான காந்தியுடன் நான்கு சக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, சிறைச்சாலையில் , தேவகியின் எதிரில், ஸ்ரீகிருஷ்ணர் எட்டு வயது பாலகனாகத் தம்மை வெளிப்படுத்திக்கொண்டார்.
அங்கு, அக் காலத்தில், பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவதாரம். இங்கு, இக் காலத்தில், தீனமான பக்தர்களை உத்தாரணம் (தீங்கிலிருந்து மீட்கை - தூக்கி நிறுத்துகை) செய்வதற்காக அவதாரம். இவ்வாறிருக்கையில், நாம் சந்தேகம் பிறக்க அனுமதிப்பதில் அர்த்தம் என்ன இருக்கிறது? ஞானிகளின் லீலைகள் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவை அல்லவோ!
இது ஒரு ஜென்மத்தில் ஏற்பட்ட பந்தமா என்ன? பாபாவுக்கு பக்தர்களிடம் ஏற்பட்ட பூர்வஜென்ம சம்பந்தம்; எழுபத்திரண்டு தலைமுறைகளாக ஏற்பட்ட ருணானுபந்தம், இவ்வாறு பாபா பேச்சுவாக்கில் பலரறிய சொல்லியிருக்கிறார்.
அன்புபிணைப்புகளால் இவ்விதமாகக் கட்டுண்ட மஹராஜ், சிறுபயணமாக எங்கோ சென்றிருக்கிறார்; மறுபடியும் திரும்பிவிடுவார் என்ற பூரணமான நம்பிக்கை பக்தர்களுடைய மனத்தில் இருக்கிறது.
நேருக்குநேராக தரிசனம் செய்தவர் சிலர். காட்சியாக தரிசனம் பெற்றவர் பலர். வேறு உருவத்திலும் மாறுவேஷத்திலும் அற்புத தரிசனம் பெற்றவர் அநேகர்.
நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அவர் தெரிவதில்லை. நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர்கள் எங்கிருந்தாலும் தரிசனம் தருவார். மக்களுடைய மனச்சாய்வு எப்படியோ அப்படியே நேரிடை அனுபவம் ஏற்படுகிறது.
சாவடியில் குப்த (ஒளிந்த) ரூபம்; மசூதியில் பிரம்ம ரூபம்; சமாதியில் சமாதி ரூபம்; மற்றதா இடங்களிலும் சுக சொரூபம்.
ஆயினும், தற்சமயத்தில், சமர்த்த சாயி இங்கு வாசம் செய்வதற்குப் பங்கம் ஏதும் நேரவில்லை என்பதிலும், அவர் இங்கு என்றும் அழிவின்றி அகண்டமாக நிலைத்திருப்பார் என்பதிலும், பக்தர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையும் விசுவாசமும் வைக்கவேண்டும்.
தேவர்கள் அவர்களுடைய இருப்பிடங்களுக்குத் திரும்பிவிடுவர். ஞானிகளோ இருக்குமிடத்திலேயே பிரம்ம ஸ்திதியை (நிலையை) அடைந்துவிடுவர். பேரானந்தத்துடன் ஐக்கியமாகிவிட்ட ஞானிகளுக்குப் போவதும் வருவதும் கிடையா.