ஷீர்டி சாயி சத்சரிதம்
"பாபுசாஹெப் ஜோக் இன்று வர மாட்டார். நான் இறந்துபோய்விட்டேன் என்று அவர் புரிந்து கொண்டிருக்கிறார். ஆகவே, நீராவது வந்து எனக்குக் காக்கட் ஆரத்தியையும் காலப்பூஜையையும் செய்வீராக!"
லக்ஷ்மண் மாமா உடனே எழுந்து நித்தியக் கிரமங்களை முடித்துக்கொண்டு பூஜைக்கு உண்டான சாமான்களை எடுத்துக்கொண்டு பூஜை செய்வதற்குச் சரியான நேரத்தில் வந்துசேர்ந்தார்.
அவர் ஷிர்டியின் கிராம ஜோதிடர்; தினமும் காலைநேரத்துப் பூஜையைச் செய்த மாதவராவின் (சாமாவின்) தாய்மாமன்.
லக்ஷ்மண் மாமா வைதீக நெறிகளின்படி செம்மையாகக் கர்மாக்களைச் செய்த ஒரு சிறந்த பிராமணர். தினமும் விடியற்காலையில் ஸ்நானம் செய்துவிட்டு தூய ஆடைகளை அணிந்துகொண்டு பாபாவை தரிசனம் செய்துகொள்வார்.
பிறகு, அவர் பாபாவின் பாதங்களை அலம்பியபின் சந்தனமும் அக்ஷதையும் இட்டு மலர்களாலும் துளசி இலைகளாலும் அர்ச்சனை செய்வார். அதன்பிறகு தூபம், தீபம், நைவேத்தியம், நீராஞ்சனம் (மஞ்சள் நீர் ஆரத்தி) ஆகிய பூஜை விதிமுறைகளைச் செய்வார். கடைசியாக தக்ஷிணையும் சமர்பிப்பார்.
பிரார்த்தனை மந்திரங்களை ஓதிக்கொண்டே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வார். பாபாவின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட பிறகு, எல்லாருக்கும் பிரசாதம் அளித்துவிட்டு நெற்றியில் திலகமும் இடுவார். பின்னர் அங்கிருந்து சென்றுவிடுவார்.
அங்கிருந்து சென்று விநாயகர், சனி தேவர், உமாரமணர் (சிவன்), அஞ்சனையின் புத்திரரான ஹனுமார் ஆகிய தெய்வங்களுக்குப் பூஜை செய்வார்.
இவ்வாறாக, இந்த கிராம ஜோதிடர் கிராமதேவதைகள் அனைத்திற்கும் நித்திய பூஜை செய்தார். இப்பொழுது பாபாவின் பூதவுடலுக்கு மிகுந்த பிரேமையுடன் சடங்குகளுடன் கூடிய பூஜையைச் செய்தார்.
லக்ஷ்மண் மாமா ஆதியிலிருந்தே நிட்டையுடன் பணி செய்வார். அதோடு கூட அவருக்கு ஒரு கனவுக் காட்சியும் கிடைத்திருந்தது. ஆகவே, அவர் காகட ஆரதிக்கு வேண்டிய பொருள்களைக் கையில் எடுத்துக்கொண்டு வந்தார். சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.
முகத்தை மூடியிருந்த துணியை விலக்கிவிட்டுப் பிரேமையுடன் முகத்தை உற்றுப் பார்த்தார். பிறகு, சாயியின் கைகளையும் பாதங்களையும் அலம்பியபின், ஆசமனத்துக்கும் நீரும் அளித்துவிட்டு விதிமுறைகளின்படி பூஜைசெய்தார்.
மௌலவியும் மற்ற முஸ்லீம்களும் உடலைத் தொடக்கூடாது என்று ஆட்சேபித்தனர். லக்ஷ்மண் மாமா அதை பொருட்படுத்தாது சந்தனம் இட்டபின் பூஜையை முழுமையாகச் செய்து முடித்தார்.
பூதவுடலோ, மாமா ஆராதனம் செய்துவந்த தேவர் சமர்த்த சாயியினுடையது; அது இந்துவின் உடலா, முஸ்லீமின் உடலா என்ற எண்ணம் மாமாவுக்கும் கனவிலும் ஏற்பட்டிருக்காது.