valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 6 January 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பாலாஜீ பாடீல் நெவாஸ்கர் என்று பெயர் கொண்ட தீவிர சாயிபக்தர் ஒருவர் இருந்தார். உலகம் காணாத வகையில் உடலுழைப்பால் பாபாவுக்கு சேவை செய்தவர் அவர்.

ஷீர்டி கிராமத்தின் முகப்புச் சாலைகளையும் பாபா தினசரி நடந்துசென்ற லெண்டிக்குச் செல்லும் சாலையையும் தினமும் பெருக்கிச் சுத்தம் செய்யும் பணியை அவர் செய்துவந்தார்.

அவருக்குப் பிறகு அந்த சேவை, அதே செயல்முறையில், உலகியல் வழக்கில் காணமுடியாத அளவிற்குத் திறமைவாய்ந்த ராதாகிருஷ்ணபாயி என்னும் பெண்மணியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மக்களால் வணங்கப்படும் பிராமண குலத்தில் பிறந்தவராயினும், 'இந்த வேலையை நான் செய்வது தகாது' என்னும் முட்டாள்தனமான எண்ணம் அப் பெண்மணியின் தூய்மையான மனத்தில் உதிக்கவேயில்லை.

விடியற்காலையில் எழுந்து கையில் துடைப்பத்தை ஏந்தி பாபா நடமாடக்கூடிய அனைத்துச் சாலைகளையும் தாமே பெருக்கிச் சுத்தம் செய்வார். அவருடைய போற்றுதற்கரியது!

அவருடைய வேலை எவ்வளவு வேகம்; எவ்வளவு சுத்தம்! அந்தப் பணியில் அவருக்கு நிகர் யார்? சில காலம் கழித்து அப்பணியை அப்துல்  ஏற்றுக்கொண்டார்.

உலகியல் வாழ்வில் இருந்தும், அதில் ஒட்டாது தாமரையிலைத் தண்ணீர் போல் வாழ்ந்து வந்த நெவாஸ்கர் மஹாபாக்யசாலி. அவருடைய தியாகத்தை விளக்கும் இப் பகுதிக் காதையை கேளுங்கள்.

வயல்களில் அறுவடை முடிந்தவுடன், மொத்த தானிய மகசூலையும் மசூதிக்குக் கொண்டுவந்து வெளிமுற்றத்தில் அம்பாரமாக குவித்துவிட்டு பாபாவின் பாதங்களில் சமர்பித்துவிடுவார்.

பாபாவே தம்முடைய உடைமைகள் அனைத்துக்கும் எஜமானர் எனக் கருதி தாமும் தம்முடைய குடும்பமும் பிழைப்பதற்கு தேவையான அளவிற்கு பாபா கொடுத்ததை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போவார்.

பாபா ஸ்னானம் செய்ததும், கை கால் முகம் கழுவியதுமான நீரைத் தவிர வேறெந்த நீரையும் நெவாஸ்கர் அருந்தமாட்டார்.

நெவாஸ்கர் ஜீவிதமாக இருந்தவரை இந்தச் செயல்முறை (மகசூல் சமர்ப்பணம்) உடையாமல் தொடர்ந்தது. நெவாஸ்கரின் அன்பான மகனும் இதைத் தொடர்ந்து வருகிறார்; ஆனால், பகுதியாக மட்டுமே.

பாபா தேகவியோகம் அடையும்வரை மகனும் தானியம் அவ்வப்பொழுது அனுப்பினார். அந்தச் சோளத்தை உபயோகித்துச் செய்த ரொட்டியையே பாபா ஒரு நாளைக்கு நான்கு தடவைகள் உண்டார்.

ஒருநாள் நெவாஸ்கரின் வருடாந்திர சிராத்த தினம் (ஈமக்கடன் செய்யும் நாள்) வந்தது. உணவு சமைக்கப்பட்டுத் தயாராகியது; பரிசாரகர்கள் பரிமாற ஆரம்பித்தனர்.