valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 26 July 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆங்கிலமுறை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டத்துக்கு படிக்கும் நல்வாய்ப்பை பெற்ற இந்த பாபு, ஒரு சமயம், வெற்றிபற்றிய சந்தேகம் அதிகம் இருந்ததால் பரீட்சைக்கு அமர்வதில்லை என்று முடிவெடுத்தான்.

அவன் இரவுபகலாக சிரமப்பட்டு படித்திருந்தான். ஒரு ஜோதிடரிடம், "பரீட்சையில் வெற்றிபெறுவேனா' என்று ஒரு கேள்வியை மேம்போக்காக கேட்டான்.

பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்து, நட்சத்திரம் - ராசி - கிரகங்கள் அமர்ந்திருந்த இடங்கள் - இவற்றையெல்லாம் விரல்விட்டு எண்ணிப்பார்த்த ஜோதிடரின் முகம் கூம்பியது.

ஜோதிடர் சொன்னார், "நீ மிக சிரமப்பட்டு படித்திருக்கிறாய். ஆனால், இந்த வருடத்தில் கிரகங்களின் நிலைமை சாதகமாக இல்லை. அடுத்த வருடம் கிரகங்களின் நிலைமை அதிர்ஷ்டகரமாக இருக்கிறது. நிச்சயமாகப் பரீட்சையில் அடுத்த வருடம் வெற்றி பெறுவாய்".

இதைக் கேட்டு திடுக்கிட்ட மாணவன், "சிரமப்பட்டு படித்ததெல்லாம் பயனின்றிப் போகப்போகிறதென்றால், பரீட்சைக்கு அமர்வதில் அர்த்தம் என்ன?" என்று நினைத்து மனமுடைந்து போனான்.

இது நடந்தவுடனே இம் மாணவனின் தாயார் (சாவித்ரி பாயி தெண்டுல்கர் ) ஷிர்டிக்கு போகும்படி நேர்ந்தது. சாயி பாதங்களில் நமஸ்காரம் செய்தார். சாயி அனைவரின் நலன்பற்றியும் குசலம் விசாரித்தார்.

மேலும் பேசிக்கொண்டிருந்தபோது, பல விஷயங்களுக்கு நடுவில் மகனுடைய பரீட்சை சமாசாரமும் எழுந்தது. அப்பெண்மணி தீனமான குரலில் கேட்டார், "பாபா, கிரஹங்கள் அனுகூலமாக இருந்திருந்தால் மகன் பரீட்சைக்கு அமர்ந்திருப்பான்.-

"ஜோதிடர் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இவ்வருடம் வெற்றிபெற வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார். ஆகவே செம்மையாகத் தயார் செய்திருந்தபோதிலும் பையன் பரீட்சைக்கே போகப்போவதில்லை.-

"பாபா, இது என்ன கிரகங்களும் தசைகளும் ! ஏன் இவ்வருடம் இந்த ஏமாற்றம்? இவ்வருடம் ஒட்டு மொத்தமாக வெற்றிபெற்றுவிடுவான் என்று நாங்கள் எல்லாருமே எதிர்பார்த்திருந்தோமே !"

இதைக் கேட்ட பாபா சொன்னார், "நான் சொல்வதை மட்டுமே அவனைச் செய்யச் சொல்லுங்கள்! ஜாதகத்தை சுருட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டு அமைதியான மனத்துடன் பரீட்சை எழுதச் சொல்லுங்கள்.-

"வேறு யார் சொல்வதையும் கேட்க வேண்டா, ஜாதகத்தை எவரிடமும் காட்ட வேண்டா, சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்திலும் நம்பிக்கை வேண்டா, என்று அவனிடம் சொல்லவும்.-

"பையனிடம், ' நீ வெற்றி பெறுவாய்; சோர்வு வேண்டா; அமைதியாகவும் தெம்பாகவும் பரீட்சை எழுது; பாபாவை முழுமையாக நம்பு! என்று சொல்லவும்."

பாபாவிடம் விடைபெற்றுக்கொண்டு தாயார் தம்முடைய இல்லத்திற்குத் திரும்பிவந்தார். பாபா அனுப்பிய செய்தியை மகனிடம் உற்சாகத்துடன் தெரிவித்தார்.