ஷீர்டி சாயி சத்சரிதம்
அறிவாளியோ மூடனோ, தம்மை அண்டியவர் அனைவரிடமும் பாபா அத்தியந்த (மிகுந்த) அன்பு செலுத்தினார். தம்முடைய ஜீவனை விட அவர்களை அதிகமாக நேசித்தார். அவர்களுக்குள் சிறிதளவும் பேதம் பார்க்கவில்லை.
அவர் மனித உருவத்தில் நடமாடிய தெய்வம். அதை மக்களுக்கு நேரிடை அனுபவமாக அளித்தார். ஆயினும், அனைவரும் அதை உணரத் தவறினார். இதற்குக் காரணம் , பாபா அவர்களிடம் காட்டிய இளகிய மனமும் பாசமும்தான்.
சிலருக்கு அவர் செல்வச்செழிப்பை அளித்தார். சிலருக்கு சந்ததியையும் சம்சார சுகங்களையும் அளித்தார். இவற்றால் பெரும்பிரம்மை அடைந்த மக்கள், ஞானத்தை பெறும் வாய்ப்பைக் கோட்டைவிட்டுவிட்டனர்.
பாபா எவரிடமாவது கேலியும் சிரிப்புமாகப் பேசினால், வேறு எவரிடமும் காட்டாத அற்புதமான அன்பைத் தம்மிடம் மட்டும்தான் பாபா காட்டுகிறார் என்றெண்ணி அந்த நபர் தலைக்கனம் கொள்வார்.
பாபா எவரிடமாவது கோபாமாகப் பேசினால்,"பாபாவுக்கு இவரைப் பிடிக்கவில்லை. பாபா நம்மையே அதிகமாக மதிக்கிறார். மற்றவர்களுக்கு அவ்வளவு மதிப்புக் கொடுப்பதில்லை" என்று மக்கள் பேசிக்கொண்டனர்.
பாபா அளித்த சலுகைகளைப் பெற நாம் ஒருவரையொருவர் முந்துவதற்கு முயன்றபோதிலும் , பாபா அந்த ரீதியில் கனவிலும் நினைக்கவில்லை. இவ்வாறாக, நாம் கடமைகளை மறந்துபோய் க்ஷேமலாபமடையாது நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோம்.
தெய்வீக நிகழ்ச்சியாக பர பிரம்மமே மனித உருவமேற்று நம்மருகில் வந்து நின்றது. ஆயினும் நாமோ, செய்யவேண்டிய காரியங்களை மறந்துவிட்டு அவர் செய்த வேடிக்கைகளிலும் தமாஷிலும் பிரியம் காட்டினோம்!
வந்தவுடனே பாபாவை தரிசனம் செய்வோம். மலர்களையும் பழங்களையும் சமர்ப்பணம் செய்வோம். தக்ஷிணை கேட்டால் தடுமாறுவோம்; அவ்விடத்திலிருந்து நழுவிவிடுவோம்.
எங்களுக்கு நன்மை தரும் உபதேசங்களை இதமாக அளித்தீர். ஆனால், எங்களுடைய அற்பபுத்தியையும் சிறுமையையும் கண்டு வாடித் துயருற்று சீக்கிரமாகவே உங்களுடைய நிரந்தரமான இருப்பிடத்திற்கு திரும்பிவிட்டீர் என்று நான் நினைக்கிறேன்.
இனிமேல் ஆத்மானந்த நிலையில் தேவரீர் மூழ்கியிருக்கும் அற்புதமான காட்சியை இக் கண்களால் காணமுடியுமா? ஆனந்தமே திரண்டுவந்தது போன்ற உருவத்தைப் பல ஜென்மங்களுக்கு காணமுடியாதவாறு இழந்துவிட்டோம்!
அந்தோ! நம்முடைய கர்மவினையின் கொடுமைதான் என்னே! நமக்கு மிக அருகிலிருந்த சாயின் என்னும் உயிர்த்துணைவரை இழந்துவிட்டோம். நம்மிடம் காரணமேயின்றி தயை காட்டும் தெய்வம் இன்று நமக்கு அன்னியமாகிவிட்டதே!
"யாரையும் துன்புறுத்துவது தகாத செயல். அது என்னை நோயுறச் செய்கிறது." பாபாவின் இந்த அறிவுரையை நாம் பின்பற்றவில்லை. நம் இஷ்டம்போலச் சண்டையும் சச்சரவும் செய்தோம்.