ஷீர்டி சாயி சத்சரிதம்
தேஹ நிர்யாணம் முடிந்த பிறகும் லீலைகள் தொடர்கின்றன! இதை அனைவரும் அறிவர்.
இது சம்பந்தமான கதைகள் அநேகம் உண்டு. விவரிக்கப் புகுந்தால் காவியம் வீடு விஸ்தாரமாகிவிடும். ஆகவே, அவற்றின் சாரத்தை மட்டும் பிழிந்தெடுத்துக் கேட்பவர்களுக்கு பயபக்தியுடன் அளிப்போமாக.
எந்தக் காலத்தில் சாயி அவதரித்தாரோ அந்தக் காலத்திலேயே வாழ்ந்து, அவருடைய சத்சங்கத்தை சுலபமாகவும் திரும்பத் திரும்பவும் அனுபவித்த நாமெல்லாரும் மஹா பாக்கியசாலிகள்.
இவ்வாறு பாக்கியம் பெற்ற போதிலும், சத்து இல்லாத விஷயங்களிலிருந்து விடுபட்டு, சம்சாரத்திலிருந்து நிவிர்த்தியடைந்து, பகவானிடம் பிரீதி கொள்ளவில்லையெனில் நமக்கு நரகத்தை தவிர வேறென்ன கிடைக்கும்?
எல்லா இந்திரியங்களிலும் சாயிபக்தி நிரம்பியிருப்பதைத் தவிர, வேறு எது வழிபாட்டு ஒழுக்கம்? இல்லையெனில், கண்கள் சாயியின் உருவத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது வாய் திறக்காது; பேச்சு அடைத்துவிடும்.
சாயி பஜனையைக் கேட்டுக்கொண்டிருப்போம்; நாக்கோ தித்திப்பான மாம்பழச் சாற்றில் மூழ்கியிருக்கும். கைகள் சாயிபாதங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும்; அதே சமயம், சுற்றியிருக்கும் ரத்தினக் கம்பளத்தின் வழுவழுப்பைத் தொட்டுப் பார்க்கவும் துடிக்கும்.
ஒருகணம் சாயியிடமிருந்து பிரிந்திருப்பதை சகித்துக் கொள்ளக்கூடியவர் எப்படி சாயிபக்தர் ஆகமுடியும்? உலகியல் வாழ்வில் விரக்தி (பற்றின்மை) ஏற்படாத மனிதரை சாயிபாதங்களின்மேல் காதல் கொண்டவர் என்று எப்படிச் சொல்லமுடியும்?
பதிவிரதையான பெண்மணி, தன் வழியில் எதிர்ப்படும் மற்ற ஆடவரை மாமனாராகவோ மைத்துனராகவோ சகோதரராகவோ கருதியே வணக்கம் செலுத்துவாள்.
பதிவிரதையின் மனம் நிச்சலமானது; எக்காரணம் கொண்டும் தன்னுடைய குடும்பத்தைக் கைவிடமாட்டாள். தன்னுடைய ஜென்மத்தின் ஒரே ஆதாரமான கணவனின்மீது அபாரமான பிரேமை செலுத்துவாள்.
கற்புநெறியில் ஒழுகும் பெண்மணி எந்த அன்னியரையும் கனவிலும் கணவனாக பாவிக்க மாட்டாள். அன்னியர்களை சந்திக்கவேண்டுமென்ற எண்ணமே அவளுக்கு எழாது.
அவளுக்குத் தன் கணவனே தெய்வம். வேறெவரையும் எப்பொழுதும் கணவனுக்கு நிகராக ஒப்பிடமாட்டாள். அவளுடைய இணைபிரியாத அன்பு கணவனிடம் மட்டுமே. சிஷ்யன் குருவிடம் இந்த ரீதியிலேயே அன்பு காட்டவேண்டும்.
பதிவிரதை கணவனிடம் கொள்ளும் பிரேமை, குருவிடம் சிஷ்யன் கொள்ளவேண்டிய பிரேமைக்கு உபமானமாக ஒப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், சிஷ்யன் குருவிடம் கொள்ளக்கூடிய பிரேமைக்கு எல்லையே இல்லை. அதன் மஹிமையை, ஒழுக்கத்தில் சிறந்த சிஷ்யனே அறிவான்.