valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 26 June 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


கௌரியும் என்னிடம் பக்தி செலுத்தினாள்.  ஒருநாள் பூஜாரி என்னிடம் கேட்டார். "கௌரிக்கு ஏற்ற நல்ல வரன் கிடைப்பானா என்று தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.-

"பாபா, மாப்பிள்ளை தேடித் தேடி நான் களைப்படைந்ததுதான் மிச்சம். எந்த முயற்சியும் பயன் தரவில்லை; மேற்கொண்டு என்ன செய்வதென்றும் தெரியவில்லை." நான் பதிலுரைத்தேன். "நீர் எதற்காகக் கவலைப்படுகிறீர்? மாப்பிள்ளை வழி நடந்து வந்து கொண்டிருக்கிறான்!-

"உம் மகள் பாக்கியசாலி, பெரும் பணக்காரியாக ஆவாள். அவளைத் தேடிக்கொண்டுதான் மாப்பிள்ளை வருகிறான்; தன்னிச்சையாகவே வருகிறான். -

"அவன் கூடியசீக்கிரத்தில் உமது வீட்டுக்கு வருவான். உமது விருப்பத்தைப் பூர்த்தி செய்வான். உம்முடைய வார்த்தையை மதித்து கௌரியைப் பாணிக்கிரஹணம் (திருமணம்) செய்துகொள்வான்."

அங்கு, பரிதாபகரமான வறுமையில் வாடிய வீரபத்ரன் பெற்றோர்களுக்குத் தைரியமளித்துவிட்டு வீட்டை வீட்டுக் கிளம்பினான். 

கிராமம் கிராமமாகப் பிச்சையெடுத்துக்கொண்டு திரிந்தான். சிலசமயம் சிறுபணி செய்து பிழைத்தான். கிடைத்ததை உண்டு திருப்தியடைந்தான். 

அலைந்து திரிந்து தெய்வாதீனமாக இந்தப் பூஜாரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். நிகழமுடியாதவற்றை நிகழவைக்கும் அல்லாமியாவின் லீலைதான் என்னே ! எல்லாருக்கும் அவன்மீது பிரியம் ஏற்பட்டது. 

கொஞ்சங்கொஞ்சமாகப் பூஜாரியின் அன்பை வென்றான். பூஜாரியும் கௌரியை அவனுக்குக் கன்னிகாதானம் செய்யவேண்டுமென்று விரும்பினார். கோத்திரம், நாடி, கணம், யோகம் முதலியன பொருத்தமாக இருந்தன. பூஜாரி ஆனந்தமடைந்தார்!

ஒருநாள் தம்முடன் வீரபத்ரனை அழைத்துக்கொண்டு பூஜாரி வந்தார். அந்த சமயத்தில் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்தவுடன் எனக்கொரு எண்ணம் உதித்தது. 

எண்ணம் உடனே சொல்லாக மலர்ந்தது, "ஒரு நல்ல முகூர்த்த நாளாகப் பார்த்து கௌரியை இவனுக்கு மணம் முடித்துவிடும்; உமது கடமையிலிருந்து விடுபடும்.

பூஜாரி தம் மனைவியின் சம்மதத்தைப் பெற்றபின், வீரபத்ரனை மாப்பிள்ளையாக நிச்சயம் செய்தார். ஒரு சுபமுகூர்த்த நாளில் கலியாணம் சிறப்பாக நடந்தேறியது. 

திருமணச் சடங்குகள் நடந்து முடிந்த பிறகு மணமக்கள் என்னை தரிசனம் செய்ய வந்தனர். சகல சௌபாக்கியங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ என்னுடைய ஆசீர்வாதங்களை வேண்டினர். 

நான் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு ஆசியளித்தேன். 'சுகமாக அன்னம் கிடைக்கும்' என்ற ஆசியைக் கேட்ட வீரபத்ரனின் மனக்கண்முன் சுகபோகங்களை பற்றிய எண்ணங்கள் விரிந்தன; முகம் மலர்ந்தது. 

அவனுக்கும் என்னிடம் பக்தி ஏற்பட்டது. சில நாள்களுக்குப்பின் அவர்கள் தனிக்குடித்தனம் வைத்தனர். ஆயினும், கையில் காசில்லை என்று குறைசொல்லாத பாக்கியசாலி எவனும் இவ்வுலகில் உளனோ!