44. மஹாசமாதி
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்ய குரு ஸ்ரீ சாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
பிரபஞ்சம் அனைத்தும் வியாபித்திருக்கும் தெய்வீகப் பேருணர்வே ! சௌக்கியங்களின் அடித்தளமே ! சகல சம்பத்துகளின் களஞ்சியமே ! கிருபை கூர்ந்து வறுமையை ஒழிப்பவரே! ஓம் நமோ ஸ்ரீ சாயி!
ஒரு தடவை உமது பாதங்களை வந்தனம் செய்தாலே எல்லாப் பாவங்களும் அழிந்துபோகின்றன . இவ்வாறிருக்கையில், பாவத்துடன் பஜனையும் பூஜையும் செய்பவர் - ஆஹா ! எவ்வளவு பாக்கியவான் ஆகிவிடுவார் !
எவருடைய புன்னகை தவழும் முகத்தைப் பார்த்தால் எல்லா சம்சார துக்கங்களும் மறந்துபோகின்றனவோ, பசியும் தாகமும் அப்பொழுதே அங்கேயே தணிந்துவிடுகின்றனவோ , அவருடைய தரிசனம் அற்புதமானதன்றோ !
எந்நேரமும் 'அல்லா மாலிக்' தியானம் செய்பவர், ஆசைகளோ அபிமானமோ இல்லாதவர், மனத்தில் பேராசையோ வாசனைகளோ (பூர்வ ஜன்ம அனுபவங்களால் ஏற்பட்ட பற்றுகள் ) இல்லாதவர், அவருடைய மஹிமையை யான் எங்கனம் வர்ணிப்பேன்?
கேடு செய்தவர்களுக்கும் நன்மை செய்யுமளவிற்கு சாந்தி எவருடைய மேல்துண்டிலும் இருக்கிறதோ, அவரை ஒரு கணமும் மறக்கலாகாது, அவரை இதயத்தில் குடிவைத்துத் தியானம் செய்யவேண்டும்.
ராமனும் கிருஷ்ணனும் தாமரைக்கண் படைத்தவர்கள். ஞானிகளுக்கோ ஒரு கண் இருக்கலாம்; கண்களே இல்லாமலும் இருக்கலாம். தேவர்கள் உருவத்தில் சுந்தர சொரூபமானவர்கள்; ஞானிகளோ ஆனந்த சொரூபமானவர்கள்.
தேவர்களின் பார்வைக்கும் கேள்விக்கும் (அருள் வீச்சுக்கு) ஓர் எல்லையுண்டு. ஞானிகளின் கடைக்கண்பார்வைக்கு முடிவென்பது இல்லை. 'யார் எங்களை எவ்வாறு அணுகிக்கின்றனரோ, அவ்வாறே அவர்களை நாங்கள் எதிர்கொள்கிறோம்' என்பது தேவர்களின் கூற்று. ஞானிகளோ நிந்தனை செய்பவர்களுக்கும் கருணை காட்டுவர்!
ராமன், கிருஷ்ணன், சாயி. இம்மூவருள் பேதம் ஏதுமில்லை. பெயர்கள் மூன்றாயினும் வஸ்து (பொருள்) ஒன்றுதான். காலத்தால் வேறுபடினும் இம் மூவரும் ஒருவரே!