valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 7 June 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபாவின் கண்ணிற்படாமல் எங்கும் எதுவும் நிகழ்வதில்லை! வானமும் பூமியும் எல்லா திக்குகளும் அவருடைய பார்வைக்குத் திறந்து கிடக்கின்றன.

தாமு அண்ணாவிடமிருந்து பதில் ஏதும் வராததால், மறுமுனையில் தாமு அண்ணாவின் நண்பர் என்ன செய்வது என்றறியாது திகைத்தார்.

இதற்கிடையே நடந்ததையெல்லாம் விவரித்து சேட் (தாமு) ஏற்கெனவே ஒரு கடிதம் தம் நண்பருக்கு எழுதியிருந்தார். அதை படித்த நண்பர் வியப்பில் ஆழ்ந்தார்! 'விதியின் செயல்பாடு விசித்திரமானது' என்றும் நினைத்தார்.

"எவ்வளவு அருமையான வியாபார பேரம் நம் வழியே வந்தது! ஏன் அதுபற்றி அவரே முடிவெடுக்கவில்லை? ஒரு பக்கீரைத் தேடி எதற்காக அலையவேண்டும்? பெரும் லாபமளிக்க கூடிய பேரத்தை வீணாக்கி விட்டாரே!-

"இறைவன் அளிக்கிறான்; கர்மவினை அதைத் தடுத்துவிடுகிறது. விதிப்படி என்ன நடக்கவேண்டுமோ அதற்கேற்ற புத்திதான் அமைகிறது. வியாபார வாய்ப்பு இவ்வளவு அருமையாக இருக்கும்பொழுது, பக்கீர் ஏன் குறுக்கே நிற்கிறார்?

"உலக விவகாரங்களை துறந்துவிட்ட இந்தப் பக்கிரிகள் வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து வயிறு வளர்க்கிறார்கள். இந்தப் பைத்தியகாரக் கூட்டம் வியாபார சம்பந்தமாக என்ன யோசனை அளிக்க முடியும்?

"அப்படியே போகட்டும் விடு! அவருக்கு லாபம் கிடைக்கவேண்டுமென்று தெய்வ அருள் இல்லை. அதனால்தான் அவருடைய புத்தி அவ்வாறு வேலை செய்தது. நான் வேறு யாரையாவது பங்குதாரராக சேர்ப்பதே சிறப்பு. நடக்கவேண்டுமென்று எது விதிக்கப்படவில்லையோ அது நடக்கவே நடக்காது என்பது பழமொழியன்றோ?"

கடைசியில் தாமு அண்ணா பேசாமல் 'சிவனே' என்றிருந்துவிட்டார். விதிவசத்தால் மாட்டிக்கொண்டவர்கள் நன்பருக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளாக சேர்ந்தனர்; வம்பை விலைக்கு வாங்கினர்!

வியாபாரத்தில் முழுமுயற்சியுடன் இறங்கினர்; ஆனால், நிலைமை தலைகீழாகியது. துரதிர்ஷ்டவசமாக பெரும் நஷ்டம் ஏற்பட்டது. பக்கீருடைய பிரம்பு (தீர்ப்பு) அத்தகையது.

"ஆஹா! தாமு அண்ணா எவ்வளவு அதிர்ஷ்டசாலி, புத்திசாலி! பக்தர்களின் மீது சாயியின் கருணைதான் என்னே! அவருடைய வாக்கின் சத்தியந்தான் என்னே! - (82 லிருந்து 85 வரை நண்பரின் புலம்பல்)

"என்னுடன் இந்தத் துணிகர செயலில் பங்காளியாக சேர்ந்திருந்தால், அவர் பெரும் நஷ்டமடைந்து ஏமாறிப் போயிருப்பார். பக்கீர் சொன்னபடி செயல்பட்டதால் தப்பித்துக்கொண்டார். அவருடைய விசுவாசம் போற்றுதற்குரியது !-

"தாமு பைத்தியம் பிடித்தவர் என்று நான் ஏளனம் செய்தேன். என்னுடைய புத்திசாலித்தனத்தால் எனக்கிருந்த கர்வம் என்னை வீழ்த்திவிட்டது. இதுவே நான் கண்ட அனுபவம். -

"அனாவசியமாக அந்தப் பக்கீரைத் தூற்றுவதற்கு பதிலாக அவருடைய பரிந்துரையை ஏற்றுக்கொண்டிருந்தால், நான் நஷ்டமும் ஏமாற்றமும் அடைந்திருக்க மாட்டேன்".