ஷீர்டி சாயி சத்சரிதம்
ஆவல் கொண்ட சாமாவே (மாதவராவே) கயாவாளியை நோக்கி இக் கேள்வியைக் கேட்டார். "உங்களுக்கு இந்தப் படம் எப்படிக் கிடைத்தது? அனைத்து விவரங்களையும் எங்களுக்குச் சொல்லுங்கள்."
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்தப் பேரதிசயத்தை கயாவாளி மாதவராவுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
மன்மாட், புண்தாம்பே (மகாராஷ்டிரா மாநிலம்) போன்ற இடங்களில் மொத்தம் இருநூறு முன்னூறு முகவர்கள் காயவாளிக்கு வேலை செய்து வந்தனர். யாத்திரிகர்கள் பற்றிய விவரங்களை நோட்டுப் புத்தகங்களில் பதிவு செய்து கயாவாளியின் தொழிலை விருத்தி செய்துவந்தனர்.
யாத்திரீகர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதே கயாவாளியின் நிரந்தரமான தொழில். அவருடைய தொழில் இவ்வாறு நடந்துகொண்டிருந்தபோது கயாவாளி ஷிர்டிக்குச் சென்றார்.
சமர்த்த சாயிநாதர் ஒரு பெரிய மஹான் என்று அவர் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தார். ஆகவே, அவரை தரிசனம் செய்து, ஆசிகளைப் பெறவேண்டுமென்று ஆவல் கொண்டார்.
அவர் சாயியை தரிசனம் செய்தார். பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். பாபாவின் படம் ஒன்றையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்னும் தீவிரமான ஆவலையும் உணர்ந்தார்.
சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த படம் ஒன்று மாதாவாராவிடம் இருந்தது. அதை கயாவாளி தமக்கு கொடுக்குமாறு கேட்டார். பாபாவிடம் அனுமதி பெற்ற பிறகு மாதவராவ் அப் படத்தை கயாவாளிக்குக் கொடுத்தார்.
"என்னிடம் இருந்த அதே படந்தான் இது, அந்த கயாவாளி இவரேதான்" என்று மாதவராவுக்கு ஞாபகம் வந்தது. "மேலும், எப்படி பாபா என்னை அதே இடத்திற்கு அனுப்பினார்? எப்படி இவ்வளவு காலம் கழித்து இந்த சந்திப்பை ஏற்படுத்தினார்!-
"சொல்லப் போனால், யார், எதற்காகப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்? என் மனத்தில் இது அறவே தோன்றவில்லை. "
ஆனால், பாபாவினுடைய வழிமுறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! அவர் சாமாவை அதே இடத்திற்கு அனுப்பி அங்கே தரிசனம் தந்தார். கயாவாளியும் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.
'பாபாவினுடைய அனுமதி பெற்றபின் நான் கொடுத்த அதே படந்தான் இது, அதே கயாவாளிதான் இவர்' என்று சாமாவுக்கு ஞாபகம் வந்தது.
'இவருடைய வீட்டில்தான் நான் அப்பொழுது ஷிர்டிக்குச் சென்றபோது தங்கினேன். இவர்தான் எனக்கு பாபாவை தரிசனம் செய்வித்தார்' என்று கயாவாளிக்கும் ஞாபகம் வந்தது.
ஒருவருக்கொருவர் செய்துகொண்ட உதவிகளை நினைத்து அவர்களுடைய மகிழ்ச்சி கட்டுக்கடங்கவில்லை. கயாவாளி சாமாவுக்கு மிகச் சிறந்த ஏற்பாடுகளை கயாவில் செய்துகொடுத்தார்.