ஷீர்டி சாயி சத்சரிதம்
சாயீ எவ்வாறெல்லாம் கூறியிருந்தாரோ அவ்வாறெல்லாம் ஜோக் குக்குப் பரிணாம முன்னேற்றம் ஏற்பட்டது. சாயியின் வார்த்தைகள் அர்த்தமுள்ளதாயின. ஜோக் பெரும் பாக்கியசாலி அல்லரோ.
தாத்பர்யம் என்னவென்றால் பாபா தீனதயாளர், ஷிர்டியில் இருந்தபடியே பக்தர்களுக்கு மங்களம் விளைவிப்பதைக் கருத்திற்கொண்டு அமிர்தம் போன்ற போதனையைச் சரியான சமயத்தில் காலை , மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் அளித்தார். அவற்றை இப்பொழுது கேளுங்கள்!
(போதனை இங்கு ஆரம்பம்)
"யான் என்னை பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில் நான் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன். நான் இல்லாது அவருக்கு சிருஷ்டியனைத்தும் சூனியமாகத் தெரியும். அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும். -
"அவர் என்னையே அகண்டமாக தியானம் செய்வார்; நாக்கு என்னுடைய நாமத்தையே ஜபம் செய்யும். எங்கே போனாலும் எங்கிருந்து வந்தாலும் என்னுடைய சரித்திரத்தையே பாடிக் கொண்டிருப்பார்.
"இவ்வாறு என்னுடன் ஒன்றிய பிறகு, செயல்புரிவது, செயல்புரியாதிருப்பது இரண்டையுமே மறந்துவிடுவார். எங்கே என்னுடைய சேவையில் இந்த அளவிற்கு பயபக்தி இருக்கிறதோ, அங்கேதான் நான் நிரந்தரமாக காத்திருக்கிறேன். -
"என்னிடம் அனன்னியமாக சரணடைந்து என்னையே அகண்டமாக எவர் நினைத்துக் கொண்டிருக்கிறாரே, அவருடைய ருணத்தை (கடனை) என்னுடைய தலையில் ஏற்றிக்கொள்கிறேன். அவரைக் கைதூக்கிவிடுவதன் மூலம் அக் கடனைத் திரும்பிச் செலுத்துகிறேன்.
"எவர் எனக்கு முதலில் சமர்ப்பணம் செய்யாமல் உணவுண்பதில்லையோ - பானங்கள் அருந்துவதில்லையோ எவர் என்னை நிதித்யாஸனம் (திரும்பத் திரும்ப நினைத்தல்) செய்கிறாரோ, அவருடைய ஆதீனத்தில் (வசத்தில்) நான் வாழ்கிறேன்.-
"எவர் எனக்குப் பின்னரே பசியாறி தாகம் தீர்த்துக்கொள்கிறாரோ, எவர் எனக்கு சமானமானவர் என்று எவரையும் அறியமாட்டாரோ, அவரையே நான் எப்பொழுதும் தியானத்தில் வைக்கிறேன்; நான் அவருடைய ஆதீனத்தில் வாழ்கிறேன். -
"தந்தை, தாயார், உறவினர்கள், நண்பர்கள், மனைவி , மக்கள் இவர்களிடமிருந்து எவர் பிரிந்துவிட்டாரோ , அவ்வகையானவர் என்னுடைய பாதங்களின்மீது காதல் கொள்கிறார். -
"மழைக்காலத்தில் பல்வேறு நதிகள் பெருக்கெடுத்துக் கரைபுரண்டு ஓடி சமுத்திரத்தை சந்திக்கின்றன. நதிகள் என்னும் அடையாளத்தைத் துறந்துவிட்டு மஹா சமுத்திரமாகவே ஆகிவிடுகின்றன. -
"நதிகளின் உருவங்கள் மறைந்துபோகின்றன; பெயர்களும் மறைந்துபோகின்றன. நீர்பெருக்கு மாத்திரமே சமுத்திரத்துடன் கலந்துவிடுகிறது. நதிக்கும் சமுத்திரத்துக்கும் திருமணம் நிகழ்கிறது. இரண்டென்னும் நிலை, ஒருமையில் காணாமற்போகிறது. -