ஷீர்டி சாயி சத்சரிதம்
ஹரிபாவூ, ஷிர்டியை நோக்கிக் கிளம்பியபோதே சமர்த்த சாயிக்கு ஹரிபாவூ, வரும் காரணம் தெரிந்துவிட்டது! வெறும் அற்புதங்களை அனுபவிக்க விரும்புவர்; அவருடைய தகுதி அவ்வளவே!
ஆகவே, அவருக்கு அதுவே அளிக்கப்பட்டது. அவரும் ஆட்கொள்ளப்பட்டார்! அவ்விதமாக, அவர் பட்ட சிரமும் பயனுடையதாயிற்று. யுக்திகளைப் பிரயோகிப்பதில் (எய்தலில்) ஞானிகள் எத்தகைய வித்தகர்கள்!
கோபர்கங்காவில் ஹரிபாவூ தம் நண்பருடன் ஒரு குதிரைவண்டியில் ஏறினார். கோதாவரி நதியில் ஸ்நானம் செய்த பிறகு ஷிர்டிக்குப் பயணமானார்.
ஷீர்டி வந்துசேர்ந்தார். கால்களையும் கைகளையும் கழுவிக்கொண்டு ஞானியைப் பார்பதற்காகக் கிளம்பினார்.
தலையில் ஒரு ஜரிகைத் தலைப்பாகையையும் கால்களில் புத்தம்புதிய ஜோடி செருப்பையும் அணிந்துகொண்டு ஹரிபாவூ சாயி பாபாவை தரிசனம் செய்ய உற்சாகமாக வந்தார்.
மசூதியை நெருங்கியபோது சாயியை தூரத்திலிருந்தே பார்த்த ஹரிபாவூ, பாபாவின் சந்நிதிக்குச் சென்று நமஸ்காரம் செய்ய விரும்பினார்.
ஆனால், புதிய ஜோடி செருப்பு இதற்கு ஒரு தடங்கலாக அமைந்தது. அதை வைத்துவிட்டுச் செல்வதற்குப் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. கடைசியில், ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து அவற்றை உள்ளே தள்ளினார்.
பிறகு தரிசனத்திற்காக மேலே சென்றார். அன்புடன் சாயிபாதங்களில் வணங்கினார். உதீ பிரசாதத்தை வாங்கிக்கொண்டு திரும்பினார். வாடாவுக்குத் திரும்ப முனைந்தார்.
ஆனால், செருப்புகளை அணியச் சென்றபோது, அங்கு அவை காணப்படவில்லை. எங்கெங்கோ தேடினார்; கிடைக்கவில்லை. நம்பிக்கையை அறவே உதறிவிட்டு வாடிய முகத்துடன் வெறும் காலோடு வாடாவுக்குத் திரும்பி வந்தார்.
அங்கு எத்தனையோ மனிதர்கள் சதா போவதும் வருவதுமாக இருந்தனர். யாரிடம் சென்று கேட்பது? அவருக்கு யோசனை ஏதும் தோன்றவில்லை.
அவருடைய மனம் நிம்மதியிழந்து குழம்பியது. தொலைந்துபோன செருப்பு மனக்கண்முன்னே வந்து நின்றது. அவருடைய மனத்தைச் செருப்புப் பற்றிக்கொண்டது. சிந்தனையெல்லாம் செருப்புமயம் ஆயிற்று!
"அய்யகோ! எவ்வளவு ஆசையுடனும் ஆர்வத்துடனும் அது வாங்கப்பட்டது! அந்தச் செருப்புத் தொலைந்துபோய்விட்டது; தொலைந்துபோவிட்டது! யாரோ ஒரு திருடன் அவற்றைத் திருடிவிட்டான். இது நிச்சயம் ." (ஹரிபாவூவின் புலம்பல்)
ஆனபோதிலும், பிறகு அவர் ஸ்நானம் செய்தார். பூஜை, நைவேத்தியம் ஆகியவை முடிந்தபிறகு பந்தியில் உட்கார்ந்து போஜனம் செய்தார். ஆனால், மனம் சமாதானமடையவில்லை.
"சபாமண்டபம் சாயியின் இடம். சாயியின் கண்ணில் படாமல் யார் என்னுடைய செருப்பைத் திருடியிருக்க முடியும்? பெரிய ஆச்சரியமாக இருக்கிறதே!"
