valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 26 April 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

அவருக்கு பயங்கரமாகக் கோபம் வந்தது. நெருப்புக் கோலங்களைப் போன்று சிவந்த கண்கள் சுற்றும் முற்றும் உருட்டி உருட்டி விழித்தன. அந்த சமயத்தில் அவரெதிரில் யாரால் நிற்க முடியும்?

இருட்டில் பூனையின் கண்கள் பளபளப்பதை போலப் பகலிலேயே அவருடைய கண்கள் ஜொலித்தன. கண்களில் இருந்து எழுந்த ஜுவாலையால் சிருஷ்டியனைத்தையுமே பொசுக்கிச் சாம்பலாக்கி விடுவார் போலத் தோன்றியது.

சட்காவின் ஒரு முனையை இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு அதைத் தம்முடைய வயிற்றின் நடுவில் ஆழமாகப் பதித்திக்கொண்டார். மறுமுனையைத் தமக்கெதிரில் இருந்த கம்பத்தில் பதித்துக் கம்பத்தை இருகைகளாலும் அணைத்துப் பலமாக அழுத்தினார்.

ஒன்றேகால் முழம் நீளமுள்ள சட்கா முழுவதும் வயிற்றினுள் சென்றுவிட்டதுபோல் தோன்றியது. வயிறே வெடித்து பாபாவின் உயிருக்கே உலை வைத்துவிடும் போலத் தோன்றியது.

கம்பாகவோ ஆழமாகவோ நடப்பட்டு உறுதியாக இருந்தது. அது எவ்விதம் நகர முடியும்? பாபா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கடைசியில் கம்பத்தை தம் வயிற்றோடு சேர்த்து அணைத்துப் பிடித்தார். பார்வையாளர்கள் நடுநடுங்கினர்.

அவருடைய வயிறு வெடித்துவிடப் போகிறதென்று பயந்து எல்லாரும் வியப்பில் ஆழ்ந்து உறைந்து போயினர். "இறைவா! இதென்ன திடுக்கிடவைக்கும் வேண்டப்படாத நிகழ்ச்சி! எவ்வளவு துர்பாக்கியகாரமான பேராபத்து!"

கவலையுற்ற மக்கள் இவ்வாறு புலம்பினர். இந்தக் கொடுமையான துரதிர்ஷ்ட நிலையில் என் செய்வது? மாவாசிப்பாயி கொண்டுவந்ததா இந்த பேராபத்து? ஆனால், பாபா தம் பக்தையை கைவிடுவதாக இல்லை.

சேவை செய்யும் பக்தரை யாராவது குற்றங்குறை கூறினால், எப்பொழுதுமே பாபா அதை பொறுத்துக்கொள்ள மாட்டார்.

பாபாவின் மீதிருந்த பிரேமையினால், பாபாவின் நலன் கருதி அந்த பக்தர் மாவாசிப்பாயிக்கு ஜாடைமாடையாக ஒரு பரிந்துரை செய்ய நினைத்தார். அது இந்த ஆபத்திலா கொண்டுவந்து விட வேண்டும்?

இறைவனுக்கே கருணை பிறந்துவிட்டது!  சாயியின் மனம் சாந்தமடைய ஆரம்பித்தது! பயங்கரமான அம் முயற்சியை கைவிட்டு விட்டு, பாபா தமது இருக்கையில் வந்தமர்ந்தார்.

பிரேமையுடன் பக்தர் தைரியமுள்ள மனிதர். ஆனால், பாபாவின் கண்டிப்பான எதிர்ப்பை பார்த்த பிறகு, மறுபடியும் அம்மாதிரியான தவறு செய்வதில்லை என்று பிரதிக்கை (சூளுரை) செய்துகொண்டார்.

அந்த நாளில் இருந்து, யாருடைய விவகாரங்களிலும் தலையிடுவது இல்லையென்றும் அவரவர் விருப்பப்படி அவரவர் செயல்படட்டும் என்றும் தீர்மானம் செய்துகொண்டார்.

சமர்த்த சாயி எதை ஏற்றுக் கொள்வது, எதை நிராகரிப்பது என்பதை நன்கு அறியக் கூடிய மகத்தான சக்திவாய்ந்தவர். அவ்வாறிருக்கும் பொழுது, வேறொருவர் எதற்காக சேவை செய்பவர்களின் அருகதையையும் தவறுகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்?